

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரங்கள் கூறியபோது, ‘வழக்கை விசாரிக்க குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நீதிபதிதான் நியமிக்கப்படுவார். அப்போதுதான் உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் வழக்கை முடிக்க முடியும். நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுவதால் ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டிசம்பர் 20 முதல் ஜனவரி 4 வரை நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரியில் விசாரணை தொடங்கப்படலாம்' என்று தெரிவித்தன.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 13 பீரோக்களில் இருந்த சுமார் 70 ஆயிரம் பக்க அசையா சொத்துகள் குறித்த ஆவணங்கள், மேல்முறையீட்டு மனு விசாரணைக்காக கர்நாடக உயர்நீதிமன்ற குற்றப்பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டன.
இதுபோல் 32 தனியார் நிறுவனங்கள் தொடர்பான 1.5 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளன.