Published : 24 Dec 2014 05:25 PM
Last Updated : 24 Dec 2014 05:25 PM

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும் தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

காலை 9.45 மணி

Flying Home /Belgium/Dominique Deruddere/95’/2014

வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்யும் முதலாளியாக வேண்டுமென்பது கோலின் எனும் இளைஞனின் ஆசை. அதற்காக சதா ஓடியாடி முயற்சித்துக்கொண்டிருக்கிறான். அச்சமயம் எண்ணெய்வயல் வைத்திருக்கும் பணக்கார அரபு ஷேக் ஒருவன் இவன் பாதையில் வருகிறான். அவனுக்கோ பெல்ஜியம் நாட்டுப்புற பகுதிகளில் செல்வாக்குப் பெற்ற பந்தயப் புறாப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்னும் வினோதமான ஆசை.

போட்டிகளில் வெல்ல பில்லியன்களைச் செலவிட அவன் தயார். அதற்கான வெற்றிபெறும் புறாக்களை எங்கிருந்தாலும் விலைக்கு வாங்கிவர இவனை அனுப்புகிறான். பெல்ஜியம் கிராமம் ஒன்றிற்கு வரும் கோலின் அங்கு பெரிய புறா வியாபாரியைச் சந்திக்கிறான். எதிர்பாராத அவரின் மகள் மீது இவனுக்கு காதல் வந்துவிடுகிறது. வாங்கிய புறாக்களையெல்லாம் பறக்கவிட்டுவிட்டு காதலியை கைபிடிக்கிறான். நிகோலஸ் ஸ்பார்க் எழுதிய லாஸெ ஹால்ஸ்டார்ம் எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.



மதியம் 11.30 மணி

Superegoes/Germany/Benjamin Heisenberg/93’/2014

மனிதர்களின் விசித்திரமான நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் உளவியல் போக்குகளை படு நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ள படம். பொஹிமிய நாடோடி ஒருவன் உளவியல் மருத்துவரைச் சந்திக்கிறான். விரைவில் அவன் உளவியல் மருத்துவரின் முக்கியமான பரிசோதனைப் பொருளாக மாறுகிறான்.

அதேநேரத்தில் அந்த பொஹிமியன் வாழ்க்கை எந்தவித மோசமும் இல்லாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அது விபரீதமாக மாறுகிறது. பொஹிமியனை தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்க பூமிக்குள்புதைத்து நிற்க வைக்கிறார் மருத்துவர். அதனால் உண்டாகும் மனஎழுச்சிகளை கண்டறிய முற்படுவது முதலாக படம்முழுவதும் பிளாக் காமெடி நிறைந்து வழிகிறது. பெர்லின் திரைப்படவிழா பனோரமாவில் இடம்பெற்றது.



மதியம் 1.15 மணி

Scouting for Zebras /Belgium/Benoit Mariage/80’/2014

பெல்ஜியம் தலைநகரின் அருகேயுள்ள அபிட்ஜன் கிராமக் குடியிருப்புப் பகுதிகளின் தெருக்களில் சதா கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஏழைச்சிறுவர்களைப் பார்க்கலாம். அவ்வழியே செல்லும் பெல்ஜியன் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறை நிர்வாகி ஜோஸ் அவர்களிடத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரனை தேர்ந்தெடுக்க முடியுமா என முயற்சிக்கிறான்.

உண்மையில் அங்கு வாழும் ஆப்பிரிக்க ஏழை மக்களிடம் இருந்து ஒரு விளையாட்டு வீரன் கிடைக்கிறான். யாயா எனும் அந்த இளைஞனின் கண்களில் கனவுகள். கால்களிலோ பந்தாட்டத்தை வெல்லும் வேகம். அவனை உயர்ந்த விளையாட்டு வீரனாக்க முடியும் என்று ஜோஸ் கூறுகிறான். யாயாவுக்கு லட்சியத்தை பிடித்துவிடும் நம்பிக்கை துளிர்க்கிறது. ஆனால் அடுத்தடுத்து நிறைய தடைகள். அவற்றை கடந்துசெல்லும் வேகத்தையும் அடைகிறான் யாயா.



மாலை 3 மணி

Break Loose / Vosmerka / Alexey Uchitel / Russia / 2013 / 85'

ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த நான்கு வீரர்கள், ஓமனில் உள்ள ரஷ்ய சிறப்பு காவல் பிரிவில் இணைகின்றனர். ஒரே பணியும், நாட்டை காக்கிறோம் என்ற இருமாப்பும் இவர்களை நண்பர்களாக்குகிறது. ஓமனில் அடிக்கடி கலவரம் நடப்பது வாடிக்கையாக இருக்க, அங்குள்ள தாதாக்களை பகைக்க வேண்டிய சூழல். கூட்டத்து தலைவனின் காதலியை நண்பர்களில் ஒருவன் கவர்ந்திட, அது மீதம் உள்ள நண்பர்களின் வாழ்க்கைக்கும் ஆபத்தாய் மாறுகிறது. இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்பவர் யார்? வீழ்பவர் யார்?



மாலை 6.15 மணி

உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x