

ஆவின் பால் கலப்பட வழக்கில், ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆவின் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு வந்ததை கடந்த ஆகஸ்டு மாதம் 19-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இக்கலப்பட மோசடியில் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதனை கடந்த செப். 19-ம் தேதி கைதுசெய்து கடலூர் சிறையில் அடைத்தனர். அவரைத் தொடர்ந்து பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள், பால் பண்ணை மேலாளர் உள்ளிட்ட மேலும் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைத்தியநாதன் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “இவ்வழக்கில் ஆவின் உயர் அதிகாரிகளின் துணையின்றி இவ்வளவு பெரிய மோசடி நடந் திருக்க வாய்ப்பில்லை. மேலும், இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளை விசாரிக்கவில்லை. மேலும், வைத்தியநாதனின் மனைவியும் இதுவரை கைது செய்யப்படாமல், தலைமறைவாக உள்ளார். பொதுநலன் கருதி, தேவைப்பட்டால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் தயங்க மாட்டேன். வைத்தியநாதன் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.