

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இரட்டை குண்டுகள் வெடித்த சம்பவம் இரண்டுக்கும் ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரில் கடந்த 28-ம் தேதி குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பவானி என்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதேபோல பெங்களூரில் இருந்து சென்னை வந்த குவஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மே மாதம் 1-ம் தேதி இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் இறந்தார். 28 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூர் மற்றும் சென்னையில் நடந்த இரு நாச வேலைகளையும் ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் தமிழக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினமே பெங்களூர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவஹாட்டி எக்ஸ்பிரஸில் வெடித்த குண்டிலும், பெங்களூரில் வெடித்த குண்டிலும் ஒரே வகையான வெடி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரு இடங்களில் வெடித்த குண்டுகளும் குறைந்த அளவு சக்தி கொண்டவை. இரு இடங்களிலும் 10 மீட்டர் தூரத்தில் வெடிகுண்டு சிதறல்கள் கிடந்தன. இரு இடங்களிலும் வைக்கப்பட்டது 'டைம் பாம்' வகையை சேர்ந்தவை. சென்னை மற்றும் பெங்களூரில் நடந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இப்படி இரு சம்பவங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த காரணங்களால்தான் இரு நாச வேலைகளையும் ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்" என்றார்.