Published : 17 Dec 2014 08:32 AM
Last Updated : 17 Dec 2014 08:32 AM

விசாரணைக் குழுவில் இருந்து உடனே வெளியேற வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல்

‘கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் குவாரியில் சமாதியாக்கி சகாயத்தின் கறியை கூறுபோட்டு விற்றுவிடுவோம்’ என ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை போலீஸார் இதுகுறித்து ஈரோட்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 3, 4 தேதி களில் விசாரணை நடத்திவரும் சகாயம் 2-ம் கட்டமாக திங்கள் கிழமை முதல் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித் துள்ளனர். அதில், தங்கள் நிலத்தை மிரட்டி கிரானைட் குவாரி அதிபர்கள் அபகரித்துவிட்டதாகவும், கண்மாய் கள், விளைநிலங்களை சேதப் படுத்தி விவசாயத்தையே அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு உடந்தையான குவாரி அதிபர்கள் மட்டுமின்றி உயர் அதிகாரிகள் முதல் தலையாரி வரை காவல், வருவாய், பொதுப் பணி, சுரங்கம் என பல்வேறு துறையினரை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணையை சகாயம் நடத்தி வருகிறார்.

அலுவலகம் இடமாற்றம்

மதுரை வந்த சகாயத்தை குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் சிலர் நோட்டமிடுவதாகவும், அவரது அறையில் ஒட்டுகேட்கும் கருவியை நிறுவி தகவல்களைக் கேட்பதாக வும் தகவல்கள் பரவின. இதை யடுத்து மதுரை அரசு சுற்றுலா மாளிகையிலிருந்து பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வைகாசி இல்லத்துக்கு தனது தங்குமிடத்தை மாற்றிக்கொண்டார். மதுரை மாவட்ட நிர்வாகம் அளித்த 11 அதிகாரிகளை அவர் திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில் சகாயத்தின் அலுவலக முகவரிக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது கொலை செய்து கூறு போட்டு விடுவதாக மிரட் டல் விடப்பட்டிருந்ததை பார்த்து சகாயம் அதிர்ச்சியடைந்தார்.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?

கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சட்டப்பணி ஆணையர் சகாயத்துக்கு குமார் எழுதும் கடிதம்: எனது உறவினர்கள் மற்றும் எனக்கு வேண்டியவர்கள் கிரானைட் குவாரி நடத்துகின்றனர். அவர்களி டம் எந்தவித விசாரணையும் நடத்தக் கூடாது. அவர்களுக்கு இடையூறும் கொடுக்கக்கூடாது. உடனே மதுரை யைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை என்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. இதையும் மீறி தொந்தரவு கொடுத்தால் கல்குவாரி யில் போட்டு சமாதி ஆக்கிவிடு வோம். சகாயம் உடம்பில் உள்ள கறி கூறு போட்டு விற்கப்படும். என் மனைவி பிரேமா ராணி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நெடுஞ்சாலைத் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றுகிறார். அவருக்கு பதவி உயர்வும், சேலத்துக்கு பணியிட மாறுதலும் வாங்கித் தர வேண்டும். கிரானைட் விசாரணைக் குழுவிலிருந்து உடனே வெளியேற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

போலீஸார் தீவிர விசாரணை

திங்கள்கிழமை மதியம் அலுவலக முகவரிக்கு தபால் மூலம் வந்த இந்த கடிதத்தை அன்று இரவு 8 மணியளவில் சகாயம் பார்த்துள் ளார். இதுகுறித்து தனது குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சகாயம், செவ்வாய்க் கிழமை பகல் 11 மணியளவில் மதுரை காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூருக்கு புகார் அனுப்பினார். பகல் 1.20 மணிக்கு மதுரை நகர் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் பெத்துராஜ் சகாயத்தின் அலுவல கத்துக்கு வந்து, அவரிடம் மிரட்டல் கடிதம் குறித்து விவரங்களைக் கேட்டார். யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்றும், இதற்கு முன்பு இதுபோல் மிரட்டல் வந்துள் ளதா என்றும் விசாரணை நடத்தி னார். தனது செயல்களை சிலர் கண்காணிப்பதாகவும், ஒட்டுகேட்பு கருவி மூலம் அறைகளை கண் காணிப்பதாகவும் உதவியாளர்கள் மூலம் தெரிந்தது. நேரடியாக மிரட்டல் ஏதும் வரவில்லை என சகாயம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடிதத்தின் பின்னணிகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

சிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட கடிதம்?

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘உண்மையில் மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்புவர்கள் யாரும் தங்கள் பெயரை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சகாயத்துக்கு வந்துள்ள கடிதத்தில் குமார் என்பவர் மிரட்டியுள்ளார். பின்னர் அவரே தனது மனைவியின் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கு உதவும்படியும் சகாயத்திடம் கேட்கிறார். மிரட்டியவரிடமே ஏன் உதவி கேட்க வேண்டும். இதனால் இந்த கடிதம் எழுதப்பட்ட பின்னணியில் குழப்பம் உள்ளது. இதுகுறித்து கொடுமுடியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் குமார் மனைவி பிரேமா ராணி என்பவர் நெடுஞ்சாலைத் துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருவது தெரிந்தது. மேலும் குமார் பெயரில் தீபாவளி சமயம் சேலம் போலீஸாருக்கு வந்த கடிதத்தில் குண்டு வைக்கப் போவதாக தெரிவித்திருந்தனர். அப்போது நடந்த விசாரணையில் குமாருக்கும் கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது. அவர்கள் குடும்பத்தைப் பிடிக்காத சிலர் அவர்களை ஏதாவது பிரச்சினையில் சிக்கவைக்க இப்படி சதிச் செயலில் ஈடுபட்டது தெரிந்தது.

தற்போது சகாயம் விசாரணை குறித்தும், அவருக்கு கிரானைட் அதிபர்கள் மிரட்டல் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுதான் சரியான சந்தர்ப்பம் எனக் கருதி குமார் குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் சகாயத்துக்கு கிரானைட் அதிபர்கள் போர்வையில் கடிதம் எழுதியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மனநோயாளிகள் எழுதுவதைப் போல் எழுதியுள்ளனர். ஆனாலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. காவல் ஆணையர் உத்தரவின்படி தல்லாகுளம் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் வடிவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் செயலர் காளிதாஸ் ஆகி யோர் கூறும்போது, ‘சகாயம் நேர்மையான அதிகாரி. அவர் கிரானைட் முறைகேடுகுறித்து விசாரித்தால் பல தகவல்கள் அம்பலமாகும் என்பதால் மிரட்டல் விடுப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. சகாயம் முழுமையான ஆய்வை மேற்கொள்ள அவருக்குத் தேவையான பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும்’ என்றனர்.

இந்நிலையில் இன்று (டிச. 17) சகாயம் மேலூர் பகுதியிலுள்ள கிரானைட் குவாரிகளை நேரில் பார்வையிட செல்லவுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x