

திமுக முன்னாள் அமைச்சர்கள் மூத்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது வாரிசுகளை மாவட்டச் செயலாளர்களாக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் மகன் ஜெகன், நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் மகன் சங்கர், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனின் மகன் சம்பத், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார், கோவை மாவட்டச் செயலாளர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆகி யோருக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் கேட்டு திமுக தலைமையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூத்த பொறுப்பாளர்களின் வாரிசுகள் யாருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய திமுக தலைமை கழக பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:
துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி கேட்டபோது அதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்ட ஸ்டாலின், ‘ஏற்கெனவே திமுக-வை குடும்பக் கட்சி என விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் களின் வாரிசுகளை எல்லாம் மாவட்டச் செயலாளர்களாக்கினால் தேவையற்ற விமர்சனங்கள் வரும். அதனால், இந்தமுறை வாரிசுகளுக்கு வாய்ப் பளிக்க வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால், வாரிசுகளுக்கு வாய்ப்பில்லை என்று ஒட்டு மொத்தமாக முடிவெடுக்காமல் தகுதியான நபர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று தலைவர் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கும் சம்மதிக்காத ஸ்டாலின், ‘தகுதியான நபர்கள் இப்போதே உரிய அங்கீகாரத்துடன் தான் இருக் கிறார்கள். தங்கவேலன் மகன் சம்பத்தும் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில் குமாரும் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் களாக இருக்கிறார்கள். என்.பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்களுக்குத்தான் மாவட்டச் செயலா ளர்கள் பதவி கொடுத்தோம் என்று சொன்னால் மற்றவர்கள், எங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்று கேட்பார்கள். மகன்களை மாவட்டச் செயலாளர்களாக்க நினைக்கும் சீனியர்கள் யாரும் தங்களது பதவியை சும்மா விட்டுக் கொடுக்கவில்லை.
அத்தனை பேருமே தங்களுக்கு தலைமைக் கழகத்தில் பதவி வேண்டும் என கேட் கிறார்கள். எனவே இந்த முறை, எந்தவித பாரபட்ச மும் இல்லாமல் வாரிசுகள் யாரையும் மாவட்டச் செயலாளர்களாக்க வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார் என்றார். என்றாலும், சில மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.