Published : 14 Dec 2014 10:47 am

Updated : 14 Dec 2014 10:47 am

 

Published : 14 Dec 2014 10:47 AM
Last Updated : 14 Dec 2014 10:47 AM

நாடகம் - அமெரிக்க அக்கா

சூசன் சீசர். மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் என்று எங்கு போய் இந்தப் பேரைச் சொன்னாலும், அவ்வளவு மரியாதை தருகிறார்கள் நாடக நடிகர்கள். சமீபத்தில் இசை நாடக விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த அவரை, நாடக நடிகர்கள் எல்லாம் அக்கா, அம்மா, அண்ணி என்று உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்க்க முடிந்தது.

“அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மானுடவியல் துறை பேராசிரியையான சூசன்,


1989-ல் இருந்தே எங்களோடு தொடர்பில் இருக்கிறார். தமிழக மீடியாக்கள் யாரும் எங்களை திரும்பிக்கூட பார்த்திராத காலகட்டத்தில், ‘புறக்கணிக்கப்பட்ட தமிழ் நாடக மேடை’ என்ற தலைப்பில் 442 பக்க புத்தகம் எழுதியவர்” என்று பெருமையோடு சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர் கலைமணி.

தமிழ் நாடகத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இல்லாமல், ரொம்பவே சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது அந்தப் புத்தகம். இசை நாடக வரலாறு, சங்கரதாஸ் சுவாமிகள், மேடையமைப்பு, நாடகக் காட்சிகள், நடிகர்களின் இன்றைய நிலை போன்றவற்றைப் பற்றி விரிவாக பேசிய அந்தப் புத்தகத்தில் பல சுவாரசியமான தகவல்களும் உள்ளன.

தமிழ் நாடகச் சூழல்குறித்த அரிதான பதிவுகளைக் கொண்ட இந்த நூலை எழுதிய சூசன் மதுரையில் நாடகக் குடும்பம் ஒன்றின் அங்கத்தினராகவே வாழ்கிறார். “இவங்க எங்க அண்ணன் பேபி நடராஜன், இது ஜான்ஸிராணி அண்ணி. விஜயலட்சுமி, கவிதா ரெண்டு பேரும் என்னோட மருமகள்கள்” என்று அழகுத் தமிழில் அறிமுகப்படுத்துகிறார்.

“அமெரிக்காவில் தமிழக பெண் கலைஞர் ஒருவரின் பரதநாட்டியத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் ஒவ்வொரு அசைவும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாடல் என்ன மொழி? என்று கேட்டேன். தமிழ் என்றார்கள். இப்படியொரு கலை உருவான மண்ணும், மக்கள் எப்படியிருப்பார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது” என்கிறார் மானுடவியல் பேராசிரியையான இவர்.

1989-ல் முதன்முறையாக இவர் மதுரைக்கு வந்திருக்கிறார்.

சுண்ணாம்புக்காரத் தெருவே விழாக் கோலம் பூண்டிருந்தது. என்னவென்று கேட்ட போது, ‘நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை நடக்கிறது’ என்ற பதில் வந்திருக்கிறது. ‘அந்தப் பக்கம் எல்லாம் போயிடாதீங்க, நாடகம் சுத்த போர்’ என்ற இலவச அறிவுரையும் கிடைத்திருக்கிறது.

“அந்த ‘போர்’ என்ற வார்த்தை, நாடகம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சூசன். நாடக நடிகர் சங்கத்துக்குள் இருந்த நடிகை ஜான்ஸிராணி முதல் சந்திப்பிலேயே தோழியாகிவிட்டார்.

“மேடையில் நடக்கிற ஒவ்வொரு விஷயமும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. சில விஷயங்களை என்னால் நம்பவே முடியவில்லை. வசனங்கள் புரியவில்லை என்றாலும், ஜான்ஸிராணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் சூசன்.

“ஸ்பெஷல் நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, உலகில் இவர்களுக்கு இணையான நாடக கலைஞர்கள் உலகிலேயே இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். பொதுவாக நாடகம் என்றால், இயக்குநர் இருப்பார். நடிகர்கள் ஒன்றாகச் சேர்ந்து பலமுறை ஒத்திகை பார்த்திருப்பார்கள். ஆனால், ஸ்பெஷல் நாடகத்துக்கு இயக்குநர் கிடையாது. ஒத்திகை கிடையாது. ராஜபார்ட் (கதாநாயகன்) போடுகிற நடிகர் புதுக்கோட்டைக்காரராக இருப்பார். ஸ்த்ரீபார்ட்டோ (நாயகி) மதுரைக்காரராக இருப்பார். பபூனோ புதுக்கோட்டைக்காரராக இருப்பார். இவர்கள் முன்பின் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால், மேடையேறியதும் ஆயிரம் முறை ஒத்திகை பார்த்தவர்களைவிட அற்புதமாக நடிப்பார்கள். இந்த ஆச்சரியம்தான் என்னை ஆய்வில் இறங்க வைத்தது” என்று தமிழ் நாடகங்களுடனான தன் அனுபவத்தை ஆர்வத்துடன் விவரிக்கிறார் சூசன். தன் ஆய்வுக்காக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் அறிமுகமாகக் காரணமாக இருந்தவரான பரமக்குடி பி.எஸ்.நாகராஜ பாகவதர் (இப்போது உயிருடன் இல்லை), பெண்ணாக இருந்தாலும் ராஜபார்ட் வேடமிடும் ஜெயலதா, சித்ராதேவி என்று சுமார் நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்களை இவர் சந்தித்திருக்கிறார்.

1891 முதல் 1930 வரையிலான காலம் தமிழ் நாடகத் துறையின் பொற்காலம் என்கிறார் சூசன். “நகரங்களில் சினிமா தியேட்டர்கள் ஆக்கிரமித்ததால், கிராமங்களை நோக்கிச் சென்ற நாடகம் இப்போது கோயில் விழாக்களில் நடக்கிற சடங்குகளில் ஒன்றாகிவிட்டது. நாடகக்காரர்களுக்கும், அந்தத் தொழிலுக்கும் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை இல்லாததால், தங்களது தந்தை, தாய் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று நாடகக்காரர்களின் குழந்தைகளே சொல்லத் தயங்கும் சூழல் இருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் நேரடி சிஷ்யர்களின் வாரிசுகள்கூட இப்போது இந்தத் துறையில் இருந்து விலகிவிட்டார்கள்” என்று சூசன் வருத்தப்பட்டுக்கொள்ளும்போது அதில் உண்மையான வலி தெரிகிறது.

பெண்களின் பங்கு

தமிழகத்தைப் பொறுத்தவரையில், அக்காலத்திலேயே பெண்கள் துணிச்சலாக வெளியே வந்து தங்களாலும் முடியும் என்று சாதித்துக் காட்டிய துறை நாடகம்தான் என்பதையும் சூசன் சுட்டிக் காட்டுகிறார். “ஆனால், நாடகத்துறையில் உள்ள பெண்களை, சகபெண்களே நாடகக்காரி என்றும், நடத்தை சரியில்லாதவள் என்றும் பேசுகிறார்கள். மக்களின் தவறான பார்வை காரணமாக, பல மகத்தான நடிகைகள் நாடகத்துறையே வேண்டாம் என்று போய்விட்டார்கள். ஒரு காலத்தில் காலில் ஜதி போட்டாலே, என்னடி கூத்தாடி மாதிரி ஆடுற என்று அடிக்கிற வழக்கம் தமிழக குடும்பங்களில் இருந்திருக்கிறது. இப்போது எந்தச் சேனலைத் திருப்பினாலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஆடவும், பாடவும் வைப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் நாடக நடிகர்களை அவர்கள் நடத்தும் விதம் மோசமாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்.

அடுத்த திட்டம்

‘புறக்கணிக்கப்பட்ட தமிழ் நாடக மேடை’ ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது அவரது தற்போதைய திட்டம். எதனால் நாடகக் கலைஞர்கள் நாடகத் துறையை விட்டு விலகுகிறார்கள், இந்தக் கலையை எப்படி மீட்டெடுப்பது என்பது பற்றி இன்னொரு புத்தகம் எழுத வேண்டும் என்பது தன் ஆசை என்கிறார்.

“23 ஆண்டுக்கு முன்பு நரம்பு மண்டலத்தையே முடக்கும் மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன். இன்னும் அதில் இருந்து மீளவில்லை. ஆனால், என் லட்சியம் கண்டிப்பாய் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள என் அண்ணன் நடராஜன் குடும்பத்தினரும் உறுதுணையாக இருப்பார்கள்” என்கிறார் உறுதியும் லட்சிய வேகமும் கூடிய குரலில்.

- கே.கே. மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நாடகம்புறக்கணிக்கப்பட்ட தமிழ் நாடக மேடைகலைமணி

You May Like

More From This Category

More From this Author