Last Updated : 24 Dec, 2014 10:13 AM

 

Published : 24 Dec 2014 10:13 AM
Last Updated : 24 Dec 2014 10:13 AM

அதிகாரத்தை பரவலாக்கும் கருணாநிதி வியூகம் பலிக்கவில்லை: திமுகவில் மீண்டும் சீனியர்களின் ஆதிக்கம்

திமுகவில் கோஷ்டிப் பூசலை சமாளிக்கவும், அதிகாரத்தை பரவலாக்கவும் கருணாநிதி வகுத்த வியூகங்கள் பலனளிக்கவில்லை. உட்கட்சித் தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட பொறுப்புகளும் தற்போதைய மாவட்டச் செயலாளர்களின் ஆதர வாளர்களிடமே சென்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மாவட்டச் செயலா ளர்கள் குறுநில மன்னர்கள்போல் நடந்து கொள்வதாகவும், இதனால் தான் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது என்றும் தலைமையிடம் பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 36 மாவட்டங்களாக இருந்த கட்சியின் அமைப்பு 65 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் புதியவர்களை பதவியில் அமர்த்தி அதிகார மையத்தை பரவலாக்கம் செய்யலாம் என கருணாநிதி நினைத்தார். ஆனால், அவரது வியூகம், உட்கட்சித் தேர்தலில் பலனளிக்கவில்லை.

திமுகவின் 30 மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சீனியர்கள், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கோ தங்கள் குடும்பத் தினருக்கோ சீட் கேட்கக் கூடாது என கட்சி மேலிடம் நிபந்தனை விதித்தது. இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் 18 சீனியர் நிர்வாகிகள் கையெழுத்து போட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இதை ஏற்கவில்லை. இந்நிலையில், தற்போது நடந்துவரும் தேர்தலில் தற்போதைய மாவட்டச் செயலாளர் களின் ஆதரவாளர்கள் மற்றும் வாரிசுகளே புதிய மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக வட்டாரத்தில் கூறியதாவது:

பல மாவட்டங்களில் கட்சியில் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அந்தப் பிரச்சினையை சமாளிக்கத்தான் எல்லா மாவட்டங் களும் 2 ஆக பிரிக்கப்பட்டன. புதிய மாவட்டங்களுக்கு அதிருப்தி யாளர்களை பொறுப்பாளர்களாக ஆக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என கருதப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரான துரை.சந்திரசேகரனும் வடக்கில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் ஆதரவாளரான எஸ்.கே.கல்யாணசுந்தரமும் வெற்றி பெற்றுள்ளனர். தஞ்சை தெற்கில் துரை.சந்திரசேகரனை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் தோல்வியடைந்தார். திருவாரூர் மாவட்டத்தில் தற்போதைய மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனே வெற்றி பெற்றுள்ளார். இவர், டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்.

திருச்சி தெற்கில் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளரு மான கே.என்.நேரு மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது ஆதரவாளர் காடுவெட்டி தியாகராஜன் திருச்சி வடக்கில் வெற்றி பெற்றார். கடலூர் கிழக்கில் தற்போதைய மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியின்றியும், மேற்கில் அவரது ஆதரவாளர் வி.கணேசனும் வெற்றி பெற்றனர். நாமக்கல் கிழக்கில் மாவட்டச் செயலாளர் காந்திசெல்வனும் மேற்கில் அவரது ஆதரவாளர் கே.எஸ்.மூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல திருவண்ணாமலை வடக்கில் எ.வ.வேலுவின் ஆதரவா ளர் சிவானந்தமும், விழுப்புரம் வடக்கில் பொன்முடி ஆதரவா ளர் மஸ்தானும் வெற்றி பெற்றுள் ளனர். விழுப்புரம் தெற்கில் அங்கயற்கண்ணி வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாவின் உறவினரான இவர், துர்கா ஸ்டாலின் மூலம் வாய்ப்பு பெற்றதாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனும், ராமநாதபுரத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனின் மகன் திவாகரும் மதுரை தெற்கில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் வாரிசு அரசியல் தொடர்வதாக அவர்களது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுவரை நடந்துள்ள தேர்தலில் எல்.மூக்கையா, பூண்டி கலை வாணன், பெரியண்ணன் அரசு, சுரேஷ்ராஜன், காந்திசெல்வன், ஏ.கே.எஸ்.விஜயன் போன்றவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆகியுள்ளனர். ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருந்தவர் களில் சுப.தங்கவேலன், பொங்க லூர் பழனிச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கருப்பசாமி பாண்டியன், பொன்முடி, பழனி மாணிக்கம், கோ.சி.மணி போன்றவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளனர்.

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் சீனியர்களுக்கு கருணாநிதி நிபந்தனைகளை விதித்தார். ஆனால், அதையும் மீறி தற் போதைய மாவட்டச் செயலாளர் களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஆதரவாளர்களையே மாவட்டச் செயலாளர், பொரு ளாளர், அவைத்தலைவர் உள் ளிட்ட பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் மாவட் டங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அங்கு ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் கைகளி லேயே அதிகாரங்கள் குவியும் நிலை உள்ளது என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x