

ராமநாதபுரம் அருகே நரிப்பையூர் கடற்கரையில் உயிரிடன் கரை ஒதுங்கிய அரிய வகை சூரிய மீனை அப்பகுதி மீனவர்கள் மீட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதியில் விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது நரிப்பையூர் மீனவ கிராமம். இங்கு அரியவகை சூரிய மீன் உயிருடன் வியாழக்கிழமை மாலை கரை ஒதுங்கியது. பாறைகளில் சிக்கி காயம்பட்டு கரை ஒதுங்கிய இந்த மீன் சுமார் 50 கிலோ எடையும், 6அடி நீளமும், 5 அடி உயரமும் உடையதாகவும் இருந்தது.
இதுகுறித்து நரிப்பையூர் மீனவர்கள் கூறியதாவது,
சன் பிஷ் (Sun Fish) என்றழைக்கப்படும் சூரிய மீன்களுக்கு துடுப்பு பகுதி உருமாறி இருக்கும். அதிகப்பட்சம் 2,500 கிலோ எடை, 8 அடி நீளம் வரையிலும் வளரக்கூடிய இத்தகைய சூரிய மீன்கள் ராமநாதபுரம் கடற்பகுதியில் காணப்படுவது அரிது.
சூரிய மீனுக்கு சிறிய வாயும், முன்புறம் துடுப்புகளும் உண்டு. மீன் இனத்திலேயே ஒரே நேரத்தில் 3 கோடிக்கும் மேல் முட்டையிடக் கூடிய மீன் இது. இனப்பெருக்கத்திற்காக மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் அரிதாக வரும் சூரிய மீன்கள் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற ஆழ்கடல் பகுதியில் அதிகளவில் காணப்படுகிறன.
500 மீட்டர் ஆழம் வரையிலும் வாழக்கூடிய சூரிய மீன்கள் ஒருநாளைக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தும். மேலும் கூட்டமாக அல்லாமல் இது தனியாகவே வாழும்.
சூரிய மீன்கள் நண்டு, இறால், கணவாய் ஆகியவற்றை உணவாக உண்ணும். ஆனால் இதனை மீனவர்கள் உணவாக உட்கொள்ள மாட்டார்கள், இதனால் கரை ஒதுங்கிய மீனை மீட்டு ஆழ்கடல் பகுதியில் விட்டோம், என்றனர்.