

திருச்சி, தேனி, திண்டுக்கல், நாகை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் ஆர்.கிர்லோஷ் குமார், தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் திட்டமிடல் துறை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை, இதுவரை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கார்த்திக் கூடுதலாக கவனித்து வந்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் திண்டுக்கல் ஆட்சியர் என்.வெங்கடாசலம், தேனி மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிகரன் திண்டுக்கல் ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வி.ராஜாராம், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் நாகை மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளர் எஸ்.பழனிச்சாமி, நாகை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.