Published : 17 Dec 2014 09:00 AM
Last Updated : 17 Dec 2014 09:00 AM

சிட்னி உணவகத்தில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: கர்ப்பிணி மீது குண்டு பாயாமல் தடுத்த பெண் பலி;பிணைக்கைதிகளை காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளர் உயிரிழந்த பரிதாபம்

ஆஸ்திரேலியாவில் உணவு விடுதியில் தீவிரவாதியிடமிருந்து பிணைக்கைதிகளைக் காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளரும், துப்பாக்கிச் சண்டையின்போது கர்ப்பிணி தோழியைக் காப்பாற்ற முயன்ற பெண் வழக்கறிஞரும் உயிர்த்தியாகம் செய்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் சாக்லேட் கபே உணவகத்துக்குள் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியுடன் புகுந்த ஹாரன் மோனிஸ் என்ற தீவிரவாதி அங்கிருந்த வாடிக்கையாளர்கள், சிப்பந்திகள் என சுமார் 30 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தான்.

அந்த விடுதியை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர் 17 மணி நேர போராட்டத்துக்குப் பின் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றனர்.

இத்தாக்குதலில் விடுதி மேலாளர் டோரி ஜான்சன், பிணைக்கைதிகளுள் ஒருவரான வழக்கறிஞர் காத்ரினா டவ்சன் (38) ஆகியோர் உயிரிழந்தனர்.

ஹாரன் மோனிஸிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து, பிணைக்கைதிகளைக் காப்பாற்ற டோரி ஜான்சன் முயன்றுள்ளார். அதில், ஆத்திரமடைந்த தீவிரவாதி, டோரி ஜான்சனைச் சுட்டுக் கொன்ற தாகத் தகவல்கள் வெளியாகியுள் ளன. டோரி ஜான்சன் துப்பாக்கியால் சுடப்பட்ட சமயத்தில் சில பிணைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

பிரபல வழக்கறிஞரான காத்ரினா டவ்சன்(38) தன் நண்பர்களுடன் வழக்கமாக சாக்லெட் கபேவில்தான் காபி அருந்துவாராம். சம்பவ தினத்தில் மூன்று நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அதில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அதிரடிப்படையினர் தாக்கு தலைத் தொடங்கியதும், கர்ப்பிணி தோழி மீது துப்பாக்கிக் குண்டு பாயாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட காத்ரினா டவ்சன் படுகாயமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்த காத்ரினா டவ்சனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மலரஞ்சலி

இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் நினைவாக ஏராளமான ஆஸ்திரேலியர்கள் அவ்விடுதி வளாகத்தில் மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அவரது மனைவி மார்கி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பிலும் தங்களது அனுதாபத்தைப் பதிவு செய்தனர்.

எச்சரிக்கை

இத்தாக்குதல் குறித்து பிரதமர் டோனி அபோட் கூறும்போது, “அரசியல் சார்ந்த வன்முறையில் சிலர் ஈடுபட தயாராக உள்ளனர். இங்கு நடந்த சம்பவம், நாம் இதுபோன்றவர்களை தொழில் முறைரீதியாகவும், சட்டத்தின் முழு பலத்துடனும் எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தியிருக் கிறது. தீவிரவாதத்தை அழித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

தீவிரவாதிகள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவும், ஆஸ்திரேலியர்களும் இதிலிருந்து மீள்வோம். பதிலடி தரவும் தயாராக உள்ளோம். சுட்டுக் கொல்லப் பட்ட தீவிரவாதி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு சர்ச்சைக்குரிய கடிதங்களை அவர் அனுப்பியுள் ளார். அவர் அலைபாயும் மனமுடையவராக இருந்துள் ளார். இணையதளங்களில், தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு, அபோட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x