Published : 01 Dec 2014 09:05 AM
Last Updated : 01 Dec 2014 09:05 AM

மோடியை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்: வைகோ, ராமதாஸுக்கு பாஜக எச்சரிக்கை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும் ராமதா ஸும் மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிபோல் செயல்படக்கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்தது உட்பட தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரு கிறது. அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் பள்ளிகளில் திரு வள்ளுவர் தினம் கொண்டாடப் படும் என மத்திய அரசு அறி வித்துள்ளது. அடுத்து பாரதியார் தினமும் கொண்டாடப்படும்.

காங்கிரஸ் அரசில் மு.க. அழகிரியை நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்கவில்லை. பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பேசினார். தமிழை வட இந்தியாவுக்கு எடுத்துச்சென்று வருகிறோம். இந்த சூழலில் பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே மோடியை விமர்சிப் பதை வைகோ, ராமதாஸ் போன் றோர் தவிர்க்க வேண்டும். அவர் கள் கூட்டணி கட்சித் தலைவர் களாக செயல்பட வேண்டும். எதிர்க் கட்சிபோல நடந்துகொள்வதைக் கைவிட வேண்டும்.

கர்நாடகத்தில் காவிரியில் தடுப் பணை கட்ட முடிவு செய்திருக்கும் காங்கிரஸை விமர்சிக்காமல், அணை கட்டுவதற்கு இன்னும் அனுமதி வழங்காத மோடியை வைகோ விமர்சிப்பது தவறு. பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோ விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. இதனால் பாஜக தொண்டர்கள் மனம் புண்பட்டுள்ளனர்.

ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. புதிதாக நடிகர், நடிகைகளை சேர்த்துக்கொண்டு பலப்படுத்தும் நிலையில் பாஜக இல்லை. யார் புதிய கட்சி தொடங்கினாலும், யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.

விமான நிலையத்தில் திடீர் சந்திப்பு

நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை செல்வதற்காக நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சந்தித்த மதிமுகவினர், ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதைக்கேட்ட வைகோ, ‘நமக்கு எதிரியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு தகுதி வேண்டும். ராஜாவுக்கு அது கிடையாது. எனவே அவர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்’ என்றார்.

இதனிடையே விமான நிலையத்துக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் வைகோவை சந்தித்தார். அப்போது இருவரும் சிரித்தபடி வணங்கிக் கொண்டனர். தற்போதைய நிலவரங்கள் குறித்து சுமார் 7 நிமிடங்கள் ஆலோசித்தனர். அதன்பின் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றனர். மதிமுக, பாஜகவினரிடையே கொந்தளிப்பான சூழல் நிலவிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x