Published : 20 Dec 2014 09:47 AM
Last Updated : 20 Dec 2014 09:47 AM

யார் இந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஒக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி. இளம் வயதிலேயே தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்த அவர் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் இணைந்து பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

பின்னர் ஆப்கானிஸ்தான், செசன்யாவில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்றார். போஸ்னியா, இராக் என பல்வேறு நாடுகளில் முகாமிட்ட அவர் இறுதியில் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து அதன் செயல் தலைவரானார்.

கார்கில் போரில் பாகிஸ்தானின் தோல்விக்கு பழிவாங்க இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று பொதுமேடைகளில் பகிரங்கமாக சூளுரைத்தார். 2006-ம் ஆண்டில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்புகளில் அவருக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இதைத் தொடர்ந்து 2008 மும்பை தாக்குதல் சதித்திட்டத்தை தீட்டி அவரே நேரடியாகச் செயல்படுத்தினார்.

மும்பை தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் கராச்சியில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருந்தனர். 2008 நவம்பர் 26-ம் தேதி கராச்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்த லக்வி, அங்கிருந்து தொலைபேசி மூலம் தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்திய உளவுத் துறையினர் தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடல்களை வழி மறித்துக் கேட்டபோது, தீவிரவாதிகளுக்கு லக்வி நேரடியாக உத்தரவுகளை பிறப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அமெரிக்க உளவுத்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

இதுதொடர்பான ஒலிநாடாக்களை இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்துள்ளது. அதன் பின்னரே இந்தியாவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் லக்வியை அந்த நாட்டு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்காக லக்வியின் குரல் மாதிரி ஒலிநாடாவை அளிக்குமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து சாக்குபோக்கு கூறி வருகிறது.

சிறையில் குடும்பம் நடத்தியவர்

ராவல்பிண்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லக்வி, வி.வி.ஐ.பி. போல் வாழ்ந்து வருகிறார். உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள அவரை, லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் அடிக்கடி சந்தித்துப் பேசி வருகின்றனர். சிறையில் அவர் ஐந்து செல்போன்களை பயன்படுத்துகிறார்.

தனது குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் சந்திக்க சிறைத் துறை வாகனங்களில் அவர் அடிக்கடி வெளியில் சென்று வருகிறார். 2010-ம் ஆண்டில் மனைவியை சிறைக்கு வரவழைத்த லக்வி, அங்கேயே குடும்பம் நடத்தியுள்ளார். அதற்கு சிறைத்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். அதன்மூலம் லக்விக்கு ஒரு மகனும் பிறந்துள்ளான். லக்வியின் அறையில் டி.வி. உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. சிறையிலேயே அவர் பிறந்தநாளையும் விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x