Published : 10 Dec 2014 09:58 AM
Last Updated : 10 Dec 2014 09:58 AM

சிலம்பு, செம்மொழி உட்பட 4 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக சிலம்பு, செம்மொழி உட்பட நான்கு விரைவு ரயில்களில் இன்று முதல் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கூட்ட நெரிசலை சமாளிப்பதற் காக சில விரைவு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதன்படி, சென்னை எழும்பூர்-மானாமதுரை இடையே இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலில் (வண்டி எண்.16181/182) தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. 10 - ம் தேதி ( இன்று) முதல் அடுத்த ஆண்டு பிப்.28ம் தேதி வரை இப்பெட்டிகள் இணைக்கப்படும். மறுமார்க்கத்தில், 11ம் தேதி (நாளை) முதல் 2015, மார்ச் 1ம் தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

இதேபோல், மன்னார்குடி-கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலில் (வண்டி எண்.16615/616) ஒரு முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டி 11ம் தேதி (நாளை) முதல் 2015, மார்ச் 1ம் தேதி வரை இணைக்கப்படும். மறுமார்க்கத்தில், 10ம் தேதி (இன்று) முதல் 2015 பிப்.28ம் தேதி வரை இணைக்கப்படும்.

புதுச்சேரி-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் (வண்டி எண்.16861/862) ஒரு முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டி 11ம் தேதி (நாளை) முதல் 2015, மார்ச் 5ம் தேதி வரை இணைக்கப்படும். மறுமார்க்கத்தில், டிச.12ம் தேதி முதல் 2015, மார்ச் 6ம் தேதி வரை இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - பழனி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (வண்டி எண்.22651/652) தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10ம் தேதி (இன்று) முதல், 2015, பிப்.28ம் தேதி வரை இணைக்கப்படும். மறுமார்க்கத்தில் 11ம் தேதி (நாளை) முதல் 2015, மார்ச் 1ம் தேதி வரை இணைக்கப்படும்.

சந்திரகாச்சி - சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண்.02807) 11ம் தேதி (நாளை) முதல் 2015, ஜன.29ம் தேதி வரை, வாரம்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களில் ஜன்சதாரன் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சந்திரகாச்சியில் திங்கள், வியாழக்கிழமைகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண்.02808) புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு புறப்பட்டு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.25 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

ரயில் சேவை ரத்து

விழுப்புரம் அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், திருப்பதி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண்.56041/042), டிச.11, 12, 15 மற்றும் 18ம் தேதிகளில் திண்டிவனம்-புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x