

தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வகம் மூலம் தமிழக ஆய்வு மாணவர்கள் பயன்பெற முடியும் என்று சென்னை ஐஐடி பேராசிரியர் பிரபுல்ல பெஹரா கூறினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி மலைகளில் சுமார் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. நியூட்ரினோ என்பது பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்களில் ஒன்று. அது பூமிக்கு அடியிலும், சூரியனுக்கு உள்ளேயும் தடையின்றி பாயக்கூடியது. இதனால், பூமிக்கு அடியில் உள்ள வளங்கள் மற்றும் சூரியனின் மையப் பகுதி பற்றி தெரிந்துகொள்ள முடியும். தற்போது அமைக்கப்படும் ஆய்வகத்தில் பிற பொருட்களில் இருந்து நியூட்ரினோக்கள் பிரித்து எடுத்து, சேகரிக்கப்படும். இதன்மூலம் நியூட்ரினோக்களின் தன்மை பற்றி மேலும் விரிவாக படிக்க முடியும். நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் 1989-ம் ஆண்டு படித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட இயற்பியல் துறை பேராசிரியர் பிரபுல்ல பெஹரா கூறும்போது, ‘‘நியூட்ரினோ ஆய்வகம் தமிழகத்தில் அமைவது, இங்குள்ள கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் முடிவதற்குள் 100-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற முடியும். இத்திட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை இணைத்துள்ளோம். சென்னை பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் அவர்களையும் இணைக்க முயற்சி எடுக்கிறோம்’’ என்றார்.
சூரிய சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசினார். ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பேராசிரியர் ஆர்.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐஐடி முன்னாள் மாணவர்களின் முதல் பொன்விழா ஆண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.