Published : 16 Dec 2014 08:49 AM
Last Updated : 16 Dec 2014 08:49 AM

ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மதிக்காத மின்வாரியம்: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை, மின்வாரியம் முறையாக பின்பற்றாததால், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், மின் வாரியத்துக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

ஆண்டறிக்கை தாக்கல் செய்ய ஐந்து கடிதங்கள் அனுப்பியும், மின்சார வாரியம் அதைக் கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக செயல்படுவதால், மின்வாரியம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்திய மின்சார சட்டம் 2003ன் படி மின்சார வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும். மின் உற்பத்தி, புதிய நிலையம் அமைத்தல், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல், கட்டணங்கள் நிர்ணயம், ஊழியர்களின் செலவுகள் என அனைத்திலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் தணிக்கைக்கு உட்பட்டே மின்வாரியம் செயல்பட வேண்டும்.

ஒழுங்குமுறை ஆணையத்தின் உயர் அமைப்பாக டெல்லியிலுள்ள மின்சார தீர்ப்பாயம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளங்குகிறது. இந்நிலையில், மாநிலங்களின் மின்சாரக் கட்டணம் எந்த அரசியல் காரணங்களுக்காகவும், வளைந்து கொடுக்காமல், வெளிப்படையாக செயல்படும் வகையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், மின்சாரத் தீர்ப்பாயம் ஒரு உத்தரவிட்டது.

அதில் மாநில மின்சார நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்கு முன், மின் கட்டணத்தை மாற்றியமைத்து, ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த வேண்டும். இந்த நடைமுறைக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்கு முன், மின்வாரியங்கள் தங்களது ஆண்டு உத்தேச வருவாய், செலவு அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பொதுமக்கள், தொழிற்சாலை, நுகர்வோர் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு, மார்ச் 31-க்குள் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நடப்பு 2014-ம் நிதி ஆண்டுக்கான மின் கட்டணத்தை மாற்றியமைப்பது (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) தொடர்பாக, ஆண்டு வருவாய், செலவு உத்தேச அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 12, ஜனவரி 2, 29, பிப்ரவரி 13 ஆகிய நான்கு தேதிகளில், மின் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதங்களுக்கு மின்வாரியம் எந்த பதிலும் அளிக்காமல், செப்டம்பர் 23 வரையிலும், அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதன் பிறகே ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் மாற்றும் உத்தேச முடிவை வெளியிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்த அறிவுறுத்தலையும் மின்வாரியம் கண்டு கொள்ளாதது, இந்திய மின்சார சட்டம் மற்றும் தீர்ப்பாய உத்தரவை மதிக்காததாகவே நுகர்வோர் அமைப்புகள் கருதுகின்றனர்.

மேலும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை ஏற்காததால், இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 142ன்படி, ஏன் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு, நோட்டீஸ் அளிக்க ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்ததாகவும் ஆனால், அதிகாரிகளின் கருத்து வேறுபாடுகளால், இந்த நோட்டீஸ் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மின்வாரியம் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பு மற்றும் வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

இனி வரும் நாட்களிலும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மின்வாரியம் மதிக்காவிட்டால், தமிழக மின் வாரியம் இந்திய மின்சார சட்டத்தை மீறி செயல்படுவதாக, வாரியம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x