

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தனித்தன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதிய திருச்சியைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் பி.கலைமணிக்கு, பன்னாட்டு இதழியல் கருத்தரங்கில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறை, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவோடு ‘இலக்கியம் மற்றும் கல்வி வளர்ச்சியில் தமிழ் ஊடகங்கள்’ என்ற தலைப்பில், 6-வது இதழியல் பன்னாட்டுக் கருத்தரங்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், பி.கலைமணி திறனாய்வு நோக்கில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தனித்தன்மைகள் என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தார். இதில், மற்ற தமிழ் நாளிதழ்களில் வெளியாகும் கட்டுரைகளை விட ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகும் கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உரிய ஆதாரங்களுடன் அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரை கருத்தரங்க மலரில் வெளியிடப்பட்டு, பி.கலைமணியின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி, கருத்தரங்கில் இவருக்கு சி.பா.ஆதித்தனார் விருது வழங்கப்பட்டது.