Published : 02 Dec 2014 03:42 PM
Last Updated : 02 Dec 2014 03:42 PM

மிரட்டும் வகையில் பேசும் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச். ராஜாவை கண்டிக்காதது ஏன்? - மோடிக்கு வைகோ கேள்வி

மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களான சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா ஆகியோரை கண்டிக்காதது ஏன்? அவர்களது பேச்சை மோடி அங்கீகரிக்கிறார? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

மதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ‘வைகோ நாவை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் பத்திரமாக வீடு போய் சேர முடியாது’ என்று பேசி இருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்பட்ட மதிமுக தொண்டர்களிடம், வன்முறையில் ஈடுபடக்கூடாது என சொல்லியிருக்கிறேன்.

சுப்பிரமணியன் சுவாமி, எனக்கு ட்விட்டரில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார். அதில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறு, இல்லாவிட்டால் தூக்கி எறியப்படுவாய். எச்சரிக்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அதே போல், மதிமுக தொண்டர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜெயலலிதா ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் எனவும் அவர் சொல்லி இருக்கிறார். இதற்கும், ஜெயலலிதா வழக்குக்கும் என்ன சம்பந்தம்?

ஹெச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் பேச்சை மோடி ஏன் கண்டிக்கவில்லை. அப்படியானால், அவர்களது பேச்சை அங்கீகரிக்கிறீர்களா?

ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரை என்னைப் போல யாரும் விமர்சித்ததில்லை..ஆனால், யாரும் என்னை இப்படி பேசியது கிடையாது.

நான் புலிகளின் ஆதரவாளன் என்பது தெரிந்துதான் வாஜ்பாயும், அத்வானியும் என்னை கூட்டணியில் வைத்திருந்தார்கள். ஆனால் வாஜ்பாயின் ஆட்சியை கவிழ்த்தவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர், ராஜபக்‌சவின் பிரதிநிதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1987-ல் இந்திய ராணுவம் இலங்கையில் அக்கிரமம் செய்கிறது என நான் கூறியதற்கு, ராஜீவ் காந்தி, இந்திய ராணுவத்தை விமர்சித்தால் விபரீதங்கள் விளையும் என இதே வார்த்தையை சொன்னார்.

என் இன மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு மரண தண்டனை கிடைத்தாலும் அதை ஏற்கத் தயார் என நாடாளுமன்றத்தில் அப்போது கூறினேன். அதே நிலையில்தான் இப்போதும் உள்ளேன். இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x