

2011 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வட்டாட்சிய ரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக மு.க.அழகிரி உள்ளிட்ட திமுகவினர் நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுகவினர் சென்றனர். இதை அங்கிருந்த தேர்தல் அதிகாரி விடியோ பதிவு செய்தார்.
அப்போது, வட்டாட்சியர் காளி முத்து, கேமராமேன் கண்ணன் ஆகியோரைத் தாக்கியதாக மு.க. அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உட்பட 21 பேர் மீது மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி மகேந்திரபூபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மு.க. அழகிரி உட்பட 21 பேரும் நேரில் ஆஜராகினர். அவர்களிடம், ‘இந்த வழக்கில் தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு, ‘எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. போலீஸார் கூறுவதுபோன்று எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை’ என்று மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரும் பதில் கூறினர். இதையடுத்து, விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.