Published : 16 Feb 2014 08:55 AM
Last Updated : 16 Feb 2014 08:55 AM

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் 'நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் எந்தவித உடன்பாடும் இல்லை' என தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடும் என செய்திகள் வருகின்றன.



திமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் தொடர்ச்சியாக சென்னைக்கு தூதர்களை அனுப்பினார்கள்.

காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் கனிமொழியும் இரண்டு முறை சோனியாவை சந்தித்துப் பேசினார். ஆனால், காங்கிரஸோடு கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இ

ருப்பினும் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என இன்னமும் விரும்புகிறார்கள். ஆனால் இரண்டு தரப்பிலுமே வாரிசுகள் இந்தக் கூட்டணியை விரும்பவில்லை.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் நம்மோடு பேசியவர்கள், "ஸ்டாலினை பொருத்தவரை கட்சிக்குள் வெளியில் உள்ள எதிரிகளைவிட கட்சிக்கு உள்ளே உள்ள எதிரிகளை வீழ்த்த நினைக்கிறார். அதற்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்து ஒருவேளை மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திமுக-விலுள்ள சிலபேர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவார்கள். பிறகு அவர்களை சமாளிப்பது சிரமம் என கணிக்கிறார் ஸ்டாலின். இதுதான் அவர் காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம்.

திமுக தனித்து போட்டியிட்டு, 4 எம்.பி-க்களை பெற்றால்கூட போதும். நம்முடைய இலக்கு 2016 சட்டமன்றத் தேர்தல்தான் என ஸ்டாலின் நினைக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக திமுக மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்று சொன்னார்கள்.

காங்கிரஸ் தரப்பில் பேசியவர்களோ, "ஸ்டாலின் எப்படி காங்கிரஸ் கூட்டணியை வெறுக்கிறாரோ அதுபோலத்தான் ராகுல் காந்தியும் திமுக கூட்டணியை வெறுக்கிறார். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் அமைந்தால் காங்கிரஸை ஆதரிப்போம் என்ற திமுக-வின் யோசனையை ராகுல் ஏற்கவில்லை. 'தொடக்கத்திலேயே தங்களுக்கான இலாக்காக்கள் வேண்டும் என அடம்பிடித்து வாங்கினார்கள். திமுக அமைச்சர்களால்தான் காங்கிரஸ் அரசு மீது ஊழல் முத்திரை விழுந்தது. தேர்தலுக்குப் பிறகு அவர்களிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? அப்படியொரு சூழல் அமைந்தால் ஜெயலலிதாவே காங்கிரஸை ஆதரிப்பார், கேட்கும் இலாக்காக்களை கொடுத்து அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம்' என்று ராகுல் கூறியிருக்கிறார்.

எனவே, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக தீர்மானம் போட்டாலும் அதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது காங்கிரஸ்" என்று சொன்னார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x