Published : 10 Dec 2014 10:05 AM
Last Updated : 10 Dec 2014 10:05 AM

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்: அருண் ஜேட்லிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத் துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு தலைவர் மு.தம்பி துரை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் மத்திய நிதி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று சந்தித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஏழை, நடுத்தர மக்களின் வசதிக் காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் கேபிள் சேவை வழங்கப்படுகிறது. நாட்டிலேயே மிகக்குறைந்த கட்டணமாக மாதம் ரூ.70-க்கு சுமார் 100 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு, மத்திய அரசால் நிபந்தனைக்கு உட் பட்ட ஒளிபரப்பு பகுதியாக சென்னை அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த பகுதி டிஜிட்டல் ஒளிபரப்பு அமைப்பு பகுதியாக மாற்றப்பட்டது. இதன்படி, டிஜிட்டல் ஒளிபரப்புக்கு தேவையான நட வடிக்கைகளையும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் எடுத் துள்ளது.

டிஜிட்டல் சேவைக்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகத்தில் உரிமம் கேட்டு, 2012-ல் தமிழக அரசு விண்ணப்பித்தது. டிஜிட்டல் ஒளிபரப்பு தொழில்நுட்பக் கருவிகளான செட் டாப் பாக்ஸ், பயனாளிகள் மேலாண் கருவி உள்ளிட்ட கருவிகளை ரூ.50 கோடிக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழக அரசு கேபிள் டிவிக்கு பிறகு விண்ணப்பித்த 9 கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் விண்ணப்பம் மட்டும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக எம்.பி.க்கள் குழு, அப்போதையை பிரதமர் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரை அணுகி, உரிமம் வழங்க வலியுறுத்தினர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி டிஜிட்டல் மயமாவதற்கு விண்ணப்பித்தால், உரிமம் வழங்கலாம் என்று உத்தர விட்டுள்ளது.

ஆனால், பல்வேறு முயற்சிகள் எடுத்தும் மத்திய அரசு இதுவரை உரிமம் வழங்கவில்லை. கடந்த ஜூன் 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியிடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இணையதள தகவல்படி, உரிமம் வழங்கும் விவகாரம் அமைச்சரவை குழுவின் பரிந்துரையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக, இந்த விஷயத்தில் அமைச்சரவைக் குழு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் அளித்தால், அதன்மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும் என நம்புகிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x