Published : 28 Dec 2014 11:40 AM
Last Updated : 28 Dec 2014 11:40 AM

சொத்து தகராறு, ஆசிரியர் வேலை மோசடி, சாதி மோதல், வீடு முழுக்க தங்க பிஸ்கட்.. - குமரியில் 3 பேர் கொலையில் நீடிக்கும் சர்ச்சைகள்

திருநெல்வேலியில் உள்ள மத்தியசுங்கத்துறை அலுவலக உதவியாளர் சுப்பையா(57), அவரது மனைவி வசந்தி(53), வளர்ப்பு மகள் அபிஸ்ரீ(12) ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறுகிறார்கள்.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுப்பையா. திருநெல்வேலியில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லாததால் அபிஸ்ரீ என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் பள்ளியில் அபிஸ்ரீ 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 20-ம் தேதி மதியம் சுப்பையாவின் அண்ணன் மகள் மணிமேகலை, சுப்பையா வீட்டுக்கு சென்றார். வீடு பூட்டியிருந்தது. தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டைத் திறந்தார். வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டு சுற்றுச்சுவர் அருகே பூச்செடிகளுக்கு இடையில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

சுப்பையா - வசந்தி - அபிஸ்ரீ

முதல் யூகமே சறுக்கல்

திருநெல்வேலி சரக டிஜஜி சுமித் சரண், கன்னியாகுமரி மாவட்டஎஸ்.பி மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் முதல் சந்தேக பார்வை படிந்தது சுப்பையாவின் மீதுதான். சுப்பையா மாயமாகி இருந்ததும், அவரது செல்பேசி அணைக்கப்பட்டு இருந்ததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

ஆனால், 26-ம் தேதி முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை வனப்பகுதியில் சுப்பையாவின் உடல் வெட்டுக்காயங்களுடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

சாதிய கொலையா?

தென் மாவட்டங்களில் சாதிய ரீதியிலான கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.. தலித் சமூகத்தை சேர்ந்த சுப்பையா குடும்பம் சாதியரீதியில் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்று அடுத்தகட்ட விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர்.

வீடு முழுக்க தங்க பிஸ்கட்?

சுப்பையாவின் வீடு அருகிலேயே வசிக்கும், அதே சமூகத்தை சேர்ந்த மெரின் ராஜேந்திரன் என்ற இளைஞர் போலீஸ் பிடியில் சிக்கினார். சுப்பையாவை கடந்த 20-ம் தேதி மோட்டார் சைக்கிளில் இவர்தான் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

`சுப்பையாவின் வீட்டில் டைல்ஸ் வேலை செய்தபோது, ஏராளமான தங்க பிஸ்கட் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவரைக் கொலை செய்த பின், அவரது வீட்டுக்கு சென்று தங்க பிஸ்கட்டை தேடிய போது வசந்தியும், அபிஸ்ரீயும் பார்த்துவிட்டதால் அவர்களையும் கொன்றேன்’ என்று மெரின் தெரிவித்ததாக உளவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன.

ஆசிரியர் பணிக்காக கொலை?

சுப்பையாவுக்கு 57 வயதானாலும் திடகாத்திரமானவர். தனியாக இந்த இளைஞனால் கொலை செய்திருக்க முடியாது என்பதால் போலீஸார் விசாரணையை முடுக்கினர். நேற்று போலீஸாரிடம் இன்னொரு புதிய கதையை மெரின் கூறியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

எம்.ஏ., பி.எட். படித்துள்ள தனக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக சுப்பையா ரூ.12 லட்சம் பணம் வாங்கினார். வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அதனால் அவரை கொலை செய்தேன். கொடுத்த பணத்தை திருப்பி எடுக்க அவரது மோட்டார் சைக்கிளிலேயே வீட்டுக்கு சென்று பீரோவை உடைத்தேன். அதை பார்த்த வசந்தி, அபிஸ்ரீயையும் கொன்றேன் என்று மெரின் தெரிவித்ததாக உளவுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நல்லவர்தான்!

பெருமாள்புரத்தில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில்தான் சுப்பையா உதவியாளராக பணியாற்றினார். வெள்ளமடத்தில் இருந்து தினமும் பஸ்ஸில் வேலைக்கு வந்து திரும்புவார். பணியிடத்தில் அவர் நல்லவர்தான் என்று சுங்கத்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள். சுப்பையா, அவரது மனைவி வசந்தி, வளர்ப்பு மகள் அபிஸ்ரீ கொலை தொடர்பாக தீவிர விசாரணையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x