Last Updated : 14 Dec, 2014 05:54 PM

 

Published : 14 Dec 2014 05:54 PM
Last Updated : 14 Dec 2014 05:54 PM

ரூ.15 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்க தடை?- வரி ஏய்ப்பை கிரிமினல் குற்றமாக அறிவிக்க சிறப்பு புலனாய்வுக் குழு யோசனை

ரூ.50 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்வதை தீவிர கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என கருப்புப் பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு யோசனை கூறியுள்ளது. மேலும் ரூ.15 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் எம்.பி.ஷா கூறியதாவது:

இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நமது முயற்சி அதிகாரத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உள் நாட்டிலும் கருப்புப் பணம் பதுக்கப்படுவது குறையும்.

இப்போதைய நிலையில் வரி ஏய்ப்பானது நமது நாட்டில் கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. இந்த குற்றச் செயல் 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதே வேளையில் அந்நியச் செலாவணி விதி மீறல்கள் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் கையாளப்படுகிறது.

இந்த இரு சட்டங்களுமே சிவில் பிரிவுகளாக உள்ளதால், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே வரி ஏய்ப்பை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

வரி சார்ந்த குற்றங்கள் சிவில் பிரிவில் இருந்தால் இதுவிஷயத்தில் வெளிநாடுகள் ஒத்துழைப்பு தர முன்வராது. ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட வரி ஏய்ப்பை கிரிமினல் குற்றச் செயலாக அறிவித்தால்தான், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து தங்கள் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பெயர் மற்றும் இதர தகவல்களை வெளியிட வேண்டிய நிர்பந்தம் வெளிநாடுகளுக்கு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை

மேலும் ரொக்கமாக வைத்திருக்கவும், வெளியில் எடுத்துச் செல்வதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் கணக்கில் காட்டப்படாமல் அதிக தொகை பரிமாறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்ஐடி-யின் துணைத்தலைவர் அரிஜித் பசாயத் யோசனை கூறியுள்ளார்.

அதாவது ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக வைத்திருக்க அல்லது வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என ஆலோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.

ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட காசோலை மற்றும் ரொக்க பரிமாற்றத்தின்போது பான் எண் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றி விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எம்பி ஷா மற்றும் அரிஜித் பசாயத் ஆகியோர் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக உள்ளனர். இதில் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழு அண்மையில் கருப்புப் பணம் தொடர்பான அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. சுவிஸ் வங்கி ஒன்றில் இந்தியர்கள் ரூ.4,479 கோடி கருப்பப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் ரூ.14,958 கோடி கருப்புப் பணம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகள் வரி சார்ந்த குற்றங்களை கடுமையான குற்றச் செயலாக அறிவித்துள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்து ஒத்துழைக்கும்படி சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கைகளை கிரிமினல் சட்டப்படி அவை பரிசீலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x