

பெங்களூரு குண்டு வெடிப்பில் பலியான சென்னையைச் சேர்ந்த பவானியின் உடல், சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பெங்களூரு குண்டு வெடிப்பில் பலியான பவானியின் (38) உடல் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப் பட்டது. பவானியின் கணவர் பாலன், மகன் பரத் (15), மகள் லட்சுமி தேவி (12) மற்றும் உறவினர்கள் உடன் வந்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து போலீஸார் ஜீப்பில் வந்திருந்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக பவானியின் உடல், அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பவானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு பவானியின் உடல் ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பவானியின் உடல் பொதுமக்க ளின் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்து. அப்போது பத்திரிகை போட்டோகிராபர்கள், வீட்டில் மாட்டப்பட்டு இருந்த பவானி யின் புகைப்படத்தை, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப் போது பவானியின் மகள் லட்சுமி தேவி, என்னுடைய அம்மாவை யாரும் போட்டோ எடுக்க வேண் டாம். அம்மா எங்கேயும் செல்ல வில்லை. அம்மா என்னுடன்தான் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் எனக்கு அம்மா சாப்பாடு ஊட்டுவார் என்று தெரிவித்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் லட்சுமிதேவியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர். ‘குழந்தைக்கு அம்மா இறந்துவிட்டதே தெரியவில்லை. அதனால் அனைவரும் வெளியே செல்லுங்கள்’ என கூறினர்.
பாஜக மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொண்டர்களுடன் வந்து பவானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் கூறும்போது, ‘‘தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும், அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். தாயை இழந்து வாடும் பெண் குழந்தைக்கு ஆதரவாக கர்நாடக அரசு அறிவித்ததை போல், தமிழக அரசும் உதவித்தொகை அறிவிக்க வேண்டும்’’ என்றார்.