Last Updated : 19 Dec, 2014 06:03 PM

 

Published : 19 Dec 2014 06:03 PM
Last Updated : 19 Dec 2014 06:03 PM

ராபர்ட் வதேரா - டி..எல்.எஃப் ஒப்பந்தத்தின் ‘முக்கியப் பக்கங்கள்’ மாயம்

ராபர்ட் வதேரா - டி.எல்.எஃப் நிறுவன ஒப்பந்தத்தின் கோப்பில் 2 முக்கியப் பக்கங்கள் மாயமாகியுள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

சர்ச்சைக்குரிய ராபர்ட் வதேரா - டி.எல்.எஃப் ஒப்பந்தம் குறித்த கோப்பு பற்றி தகவலுரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற்ற அசோக் கெம்கா அதில் 2 பக்கங்கள் அரசு பதிவேடுகளிலிருந்து மாயமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

2 பக்கங்கள் மாயமானதை ஒப்புக் கொண்ட ஹரியாணா மாநில தலைமைச் செயலர் பி.கே.குப்தா இது குறித்து துறை ரீதியான உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், கோப்பு மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

முந்தைய ஹூடா அரசு இந்த ஒப்பந்தம் குறித்த விசாரணைக்கு 3 உறுப்பினர் விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகார பூர்வ அறிவிக்கைகள் முக்கிய கோப்பிலிருந்து காணாமல் போயுள்ளது. வதேராவின் நிறுவனத்திற்கு ஹூடா அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

"இது ஒரு முக்கியமான விவகாரம், இது விசாரிக்கப்பட வேண்டியது, திடீரென அரசு அறிவிக்கைகள் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி?

கோப்பின் இந்த பக்கங்கள் மிக மிக முக்கியமானவை. அப்போது ஆட்சியிலிருந்த அரசியல் கட்சி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கமிட்டியில் 3 உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது என்பதற்கும், ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் காலனி உரிமத்தை கள்ளச்சந்தையில் விற்றதற்கும், நான் அந்த நிலமாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கும் காணாமல் போன இந்தப் பக்கங்களும் ஒரு ஆதாரமாக இருக்கும். இப்போது இது காணாமல் போயுள்ளதால் இந்த ஒப்பந்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஹரியாணா மாநில தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கோப்பின் பக்கம் 1 மற்றும் 2 காணாமல் போனது உண்மைதான் என்று கூறிய தலைமைச் செயலர் குப்தா, “நாங்கள் அந்தக் கோப்பை மறு உருவாக்கம் செய்வோம். சுமார் 6, 7 மாதங்களுக்கு முன்பு கெம்காவுக்கு முன்னதாக மற்றொரு நபர் தகவலுரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார். அவர் கேட்ட தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தகவல் ஆணையர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டுள்ளோம், அந்தப் பக்கங்களின் நகல்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x