வாக்காளர் பட்டியலில் போலிகளா?- ஸ்ரீரங்கத்தில் ஆய்வு நடத்த தேர்தல் ஆணையர் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் போலிகளா?- ஸ்ரீரங்கத்தில் ஆய்வு நடத்த தேர்தல் ஆணையர் உத்தரவு
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் திருத்தம், தேசிய வாக்காளர் தினம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழகத் தேர்தல் துறை அதிகாரிகளுடன் மத்திய துணைத் தேர்தல் ஆணையர் சுதிர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தலுக்கு தயாராகும் ஸ்ரீரங்கம் தொகுதியில், பிழையின்றி வாக்காளர் பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.

ஜனவரி 25-ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஜனவரி இரண்டாம் வாரத்தில் தொடங்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங் கள், பொது இடங்கள், தனியார் குடியிருப்பு வளாகங்கள், பொதுமக்கள் கூடும் சந்திப்புகள் என அனைத்து பகுதிகளிலும் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தேர்தல் துறை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய தேர்தல் துணை ஆணையர் சுதிர் திரிபாதி பங்கேற்றார். இவர் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான துணைத் தேர்தல் ஆணையர் ஆவார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சிவஞானம், அஜய் யாதவ், துணைத் தேர்தல் அதிகாரி சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத் தேர்தல் துறை அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று, துணை ஆணையரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இதுகுறித்து தேர்தல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜனவரி 10-ம் தேதி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினத்தில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

இதுகுறித்து துணைத் தேர்தல் ஆணையர் சுதிர் திரிபாதி விரிவாக ஆய்வு நடத்தினார். மாவட்டங்களில் பிழைகளின்றி, வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர்ந்து வாக்காளர் திருத்தப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அங்கு மார்ச் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், போலி வாக்காளர் இல்லாத அளவுக்கு வீடு வீடாக நேரடி ஆய்வு நடத்தி பட்டியலை சரிபார்க்க உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியலில் போலி களை கண்டுபிடிப்பதற்கான மென் பொருள் விரைவில் வந்து விடும் என்றும், அதன்மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட வாக்காளர் விவரங்களை கண்டு பிடித்து நீக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in