Published : 06 Dec 2014 09:36 PM
Last Updated : 06 Dec 2014 09:36 PM

இந்தியாவின் அபார ஆட்டம் வீண்: கடைசி நிமிட கோலால் ஜெர்மனி வெற்றி

புவனேஸ்வரில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இன்று கடைசி நிமிட கோலில் ஜெர்மனி அணி இந்தியாவை 1-0 என்று வீழ்த்தியது.

இந்திய அணி ஆடுகளத்தின் இடதுபுறத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது. 3-வது நிமிடத்தில் ஜெர்மனி வசம் பந்து செல்ல, 6-வது நிமிடத்தில் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது இந்தியா. 8-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கிடைத்தாலும், அதை கோலாக்க முடியவில்லை. 11-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மோரிட்ஸ் போல்க் கிரீன் கார்டால் எச்சரிக்கப்பட்டார்.

முதல் கால் ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில் 2-வது கால் ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இந்தியாவின் கோல் வாய்ப்பு நழுவியது. 26-வது நிமிடத்தில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஜெர்மனியின் கோல் வாய்ப்பை முறியடித்தார். இந்தியாவின் தரம்வீர் சிங் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், மற்ற வீரர்கள் அதைப் பயன்படுத்தவில்லை.

அதேநேரத்தில் ஜெர்மனிக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அணியால் கோலாக்க முடியவில்லை. இந்திய வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியதால் ஜெர்மனி கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் தரம்வீர் அற்புதமாக பந்தை எடுத்துச் சென்று ஷூட் செய்ய ஆகாஷ் தீப் பந்தை தனது ஸ்டிக்கில் வாங்கினார். ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஜெர்மன் வீரர்கள் அவர் ஸ்டிக்கிலிருந்து ரீபவுண்ட் ஆன பந்தை கோலாகாமல் தடுத்தனர்.

அதன் பிறகும் தொடர்ந்து ஜெர்மனியின் டி-யிற்குள் இந்திய வீரர்கள் நுழைந்தனர். ஆனால் பினிஷிங் இல்லை. 3-வது கால் மணி நேர ஆட்டத்திலும் கோல் இல்லை. ஆனால் 35-வது நிமிடத்தில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பறந்து ஒரு ஜெர்மன் கோல் முயற்சியை தடுத்தார்.

இந்நிலையில் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டது. ஆனாலும் 49வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது ஆனால் அதனால் பயன் இல்லை.

ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருக்கும் நிலையில் ஜெர்மனி அருமையாக ஒரு மூவைச் செய்தது ஆனால் பினிஷிங் இல்லாததால் கோல் விழவில்லை.

கடைசியில் ஆட்டம் முடிய 40 வினாடிகளே இருந்த நிலையில் ஜெர்மனி வீரர் ஃபியூக்ஸ் ப்ளோரியன் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்வளவு நேர கடின உழைப்பும் வீணானது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை பினிஷிங் இல்லாமல் கோட்டை விட்டது இந்தியா. மொத்தத்தில் அபாரமான ஆட்டம் கடைசி நிமிட ஜெர்மனி கோலால் இந்திய இதயம் நொறுங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x