

அரசு விழா நடத்துவதாகக் கூறி, பள்ளி மாணவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து ரூ. 37 லட்சம் மோசடி செய்ததாக முதன்மைக் கல்வி அதிகாரி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் தனித் திறனை வெளிக்கொணரும் வகை யில் ஆண்டுதோறும் பல்வேறு கலைப்போட்டிகளை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் இப்போட்டிகளை நடத்த, அப்போதைய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கே.ஜெயக்கண்ணு உத்தரவிட்டார்.
மாநில அளவிலான போட்டிகள் 2013-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப் பட்டன. 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிக்காக மாவட்டம் முழு வதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர் களிடம் தலா ரூ.5 வீதம் வசூலிக் கப்பட்டதாகவும், தனியார் பள்ளி களிடம் நன்கொடை வசூலிக்கப் பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக திருநெல்வேலி யைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்த புகாரில், மாணவ, மாணவியரிடம் வசூலித்த தொகை ரூ.24 லட்சம், விழா மலரில் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் நன்கொடையாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யப் பட்டுள்ளது. உணவுக்காக ரூ.7 லட்சம், விழா மலர் வெளியிட ரூ.4 லட்சம், விழா மேடை அலங்காரத்துக்கு ரூ.5.5 லட்சம், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவுக்கு ரூ.1.5 லட்சம் செலவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தொகையில் ரூ.37 லட்சம் வரை முறைகேடு நடைபெற்றுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், முதன் மைக் கல்வி அதிகாரி கே.ஜெயக் கண்ணு, அப்போதைய திருநெல் வேலி, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் 10 பேர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, இவ்விழா தொடர்பாக கல்வித் துறை சார்பில் நிதி தணிக்கை செய்யப்பட்டு, எவ்வித முறைகேடும் இல்லாத நிலையில் கல்வித்துறை இயக்குநருக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.முறைகேடு புகார் எழுந்ததும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விழா செலவினங்கள் குறித்து மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு, அதிலும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.