

இலங்கை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட மீனவர்கள் 5 பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதாக அமைச்சர் ஜெயபால் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் புவனகிரி செல்வி ராமஜெயம் கேட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ஜெயபால் கூறியதாவது:
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை மீட்பதற்காக தமிழக அரசு முழு முயற்சி எடுத்தது. இதற்காக மீனவர்களின் குடும்பத்தினரை அழைத்து பேச்சு நடத்தப்பட்டது. தூக்கு தண்டனையில் இருந்து மீண்டு வந்த மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும் அவர்கள் குடும்பத்தினரின் படிப்பு செலவுக்காக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதவிர மீனவர்களை மீட்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.