Published : 14 Dec 2014 10:06 AM
Last Updated : 14 Dec 2014 10:06 AM

கழிப்பறைகள் கட்டுவது, தூய்மைப் பணிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

நாட்டை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ரோட்டரி கிளப் சார்பில் ‘தூய்மை இந்தியா’ உறுதியேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பாமர விவசாயிகள் முதல் நடிகர்கள் வரை பலரும் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் இத்திட்டத்தில் பங்கேற்று, வாரத்துக்கு 2 மணி நேரம் என ஆண்டுக்கு 100 மணி நேரத்தை நாட்டின் தூய்மைப் பணிக்கு செலவிட வேண்டும்.

நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 68.8 மில்லியன் டன் திடக்கழிவுகள் சேருகின்றன. இது 2041-ல் 160.5 டன்னாக உயரும் என்று கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. 27 மில்லியன் டன் குப்பைகள் நகரின் வெளிப்புறங்களில் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. கிராமப்புறங்களில் ஒரு நாளுக்கு 0.4 மில்லியன் டன் அளவில் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன.

இந்தியாவில் 68 சதவீத கிராமங்கள் இன்னமும் கழிப்பிட வசதிகளை பெறாமல் உள்ளன. கிராமப்புறங்களில் வரும் 88 சதவீத நோய்களுக்கு சுத்தமின்மையே காரணம். சுத்தமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஒருவர் மாதம் ரூ.6500 செலவழிக்க வேண்டியுள்ளது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. இதை கருத்தில் கொண்டே, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசியல் விடுதலையைவிட நாட்டின் சுகாதாரம்தான் முக்கியம் என்று சொன்ன காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளுக்குள் (2019 அக்டோபர் 2) இந்தியாவை தூய்மையான நாடாக்க வேண்டும்.

சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1.34 லட்சம் கோடி செலவில் கழிப்பறைகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் 11.11 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். அடுத்த 5 ஆண்டுக்குள் நாட்டின் 2.47 லட்ச கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.20 லட்சம் தரவுள்ளோம். இதுமட்டுமன்றி 1.04 கோடி வீடுகளில் கழிப்பறையும், 5.08 லட்சம் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளும் கட்டப்படவுள்ளன.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x