Last Updated : 15 Dec, 2014 11:13 AM

 

Published : 15 Dec 2014 11:13 AM
Last Updated : 15 Dec 2014 11:13 AM

அலிகர் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா: அரசு உத்தரவுக்குப் பிறகு முதன்முறை கொண்டாட்டம்

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த நாளை நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் முதன்முறையாக பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அலிகர் பல்கலைகழகத்தின் பெண்ணியக் கல்வி மையம் சார்பில், தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாரதியாரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன் தினம் ஒரு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. ‘பாரதியாரின் பாடல்கள் உணர்த்தும் தேசியக் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த சொற்பொழிவில் அப்பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையின் பேராசிரியர் து.மூர்த்தி உரையாற்றினார்.

“பெண்ணிய உரிமைக்கு பாரதியார் தீவிரமாக ஆதரவளித்தார். சமூகத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிராக வாதிட்டு ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று முழங்கினார். பாரதியாரின் கொள்கைகளின்படி, வேலைப் பிரிவினைகள் மற்றும் ஊதியங்களில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கினால் அவர்களுக்கு சுயமரியாதை கிடைக்கும்” என மூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, பாரதியாரைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்திய அதே பல்கலைகழகத்தின் வரலாற்று துறை உதவி பேராசிரியர் எஸ்.சாந்தினிபி, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சிற்றுரை வழங்கி அமர்வைத் தொடங்கி வைத்தார். இதில் அவர், பாரதியாரைப் பற்றி வட இந்தியர்கள் புரிந்துகொள்ளும் வகையில் முக்கிய சம்பவங்கள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை, புலத் தலைவரான பேராசிரியர் என்.ஏ.கே. துரானி இக் கருத்துரைகள் மீதான மதிப்புரை வழங்கினார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த பெண்ணிய கல்வி மையத்தினருக்கு பாரதியாரைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதால், அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழர்களின் உதவியை அவர்கள் நாட வேண்டியதாயிற்று.

உத்தராகண்ட் மாநில பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பாரதியார் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

இதன் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பாரதியார் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x