

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்துப் பேசுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறதே தவிர, பாஜக கூட்டணியில்தான் மதிமுக இன்னமும் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அம்பேத்கர் படத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை தாம்பரத்தில் பசுமைச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பிறந்தநாள் போல, மகாகவி பாரதியின் பிறந்தநாளையும் தேசிய அளவில் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன். கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
பாரதி மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பாரதி பிறந்தநாளை முன்னிட்டு ‘பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்’ என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள் வரும் 11-ம் தேதி நடத்தப்படவுள்ளன. இதற்காக பிரதமர் மோடி, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கி றேன்.
இலங்கையில் இருக்கும் 38 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். கச்சத்தீவு பற்றி முதலில் பேசியதே பாஜகதான். ஆனால், அதுபற்றி இப்போது பேசத் தேவையில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நான் நேரில் சந்தித்துப் பேசுவதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதே தவிர, பாஜக கூட்டணியில்தான் மதிமுக இன்னமும் இருக்கிறது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.