Published : 08 Dec 2014 08:55 AM
Last Updated : 08 Dec 2014 08:55 AM

ஆனைப்பார் தீவில் 144 கிலோ கஞ்சா பறிமுதல்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஆனைப்பார் தீவில் கடற் பரப்பில் கிடந்த 144 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் அருகே உள்ளது ஆனைப்பார் தீவு. இந்த தீவில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பக வனப் பாதுகாவலர் தீபக் எஸ். பில்கியின் உத்தரவின் பேரில், கீழக்கரை வனச்சரகர் வெங்கடாசலபதி மற்றும் வனக் காப்பாளர்கள் இன்னாசி முத்து, காதர் மஸ்தான் ஆகியோர் ஆனைப் பார் தீவில் நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் ஆனைப்பார் தீவு கடற்பரப்பில் 8 மூட்டைகளில் 72 பொட்டலங்களில் சுமார் 144 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஏர்வாடி காவல்துறையினர் தீவில் கடத்தல்காரர்கள் பதுங்கி உள்ளனரா என்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால், யாரும் சிக்கவில்லை.

கடந்த நவம்பர் 25-ம் தேதி ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் 240 கிலோ கஞ்சாவும், கடந்த 29-ம் தேதி தனுஷ்கோடியில் 142 கிலோ கஞ்சா என கடந்த 10 நாட்களில் மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 526 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாக பறிமுதல் செய்து 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து கடல் மார்க் கமாக, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள் ளதால், கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்க இலங்கையின் வடக்கு மாகாண டிஐஜி, இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு இயக்குநர் தமிழக காவல்துறை அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அப்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, கடல் மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்படும்போது, தமிழக - இலங்கை அதிகாரிகள் ஒத்துழைப்புகளை பரிமாறிக் கொள்வதுடன், கடத்தல்காரர்கள் நாடு விட்டு நாடு செல்லும்போது கைது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போதை பொருள் கடத்தல்காரர்களை கூண்டோடு பிடிக்க பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x