

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பதிவுக்கு ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கேட்கக்கூடாது என காஸ் ஏஜென்சிகளுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த வழக் கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் மக்களின் அடையாளத்துக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்பட பல்வேறு அடையாள அட்டைகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தேவையற்றது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஆதார் அடையாள அட்டை கேட்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விலக்கக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இந்நிலையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கான மானியம் பெற, ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் சமர்ப்பிக்குமாறு இணைப்புதாரர்களுக்கு தனியார் காஸ் ஏஜென்சிகள் செல்போனில் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. ஏற் கெனவே, ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பதிவுக்கு ஆதார் அடையாள அட்டை கேட்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் காஸ் ஏஜென் ஸிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. இது சட்டவிரோ தமாகும்.
எனவே, காஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கு ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் கேட்கக்கூடாது என்றும், நீதிமன்றத் தடையை மீறி ஆதார் கார்டு, வங்கி கணக்கு கேட்கும் ஏஜென்சிகளின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.
மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு இன்று (டிச. 10) விசாரணைக்கு வருகிறது.