Last Updated : 24 Dec, 2014 10:21 AM

 

Published : 24 Dec 2014 10:21 AM
Last Updated : 24 Dec 2014 10:21 AM

500 தீவிரவாதிகளை தூக்கிலிடும் பாக். முடிவு கவலையளிக்கிறது: மனித உரிமைகள் அமைப்பு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கருத்து

500 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.இது தொடர்பாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆசிய – பசிபிக் பிராந்திய துணை இயக்குநர் டேவிட் கிரிப்பித் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் மாணவர்கள் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், அதற்கு பதிலடியாக தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

இதன் காரணமாக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 500 தீவிரவாதிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இந்நடவடிக்கை உண்மையான பிரச்சினையை தீர்க்க உதவாது. வன்முறையால் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வாழும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

பாகிஸ்தானில் வழக்கு விசாரணைகளில் குறைபாடுகள் இருப்பது அவ்வப்போது வெளியே தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவசர அவசரமாக கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்?

தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலம், அந்நாட்டில் மேலும் வன்முறை அதிகரிப்பதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு டேவிட் கிரிப்பித் கூறியுள்ளார். பாகிஸ்தானில் 500 தீவிரவாதிகள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 55 பேரின் கருணை மனுக்களை அந்நாட்டு அதிபர் சமீபத்தில் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து, அவர்களுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x