

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள பேராபத் துகளை எதிர்த்து ஒன்றிணைந்து போராட மொத்த தமிழகமும் ஒன்றுதிரள வேண்டும் என்றார் தஞ்சையில் நேற்று விழிப்புணர்வு பிரச்சார பயணத்தைத் தொடங்கிய மதிமுக பொதுச்செயலர் வைகோ.
காவிரியில் புதிய அணை களைக் கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கு கோரியும் டிச.12 முதல் 22 வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ அறிவித் திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூரை அடுத்த களிமேடு கிராமத்தில் தனது பிரச்சார பயணத்தை நேற்று தொடங்கிய வைகோ பேசியதாவது: தமிழகத்தைச் சூழ்ந்துள்ள 3 முக்கிய பேராபத்துகளை எதிர்த்து இந்தப் பிரச்சார இயக்கத்தைத் தொடங் கியுள்ளேன். இதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூ னிஸ்ட் போன்ற கட்சிகள், பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடகத்தின் அடாவடிச் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். இதை வலியுறுத்த மொத்தத் தமிழகமும் கிளர்ந்தெழ வேண்டும்.
இதைவிடப் பெரிய ஆபத்து மீத்தேன் எரிவாயு திட்டம். மீத்தேன் எடுக்க அனுமதி பெற்ற நிறுவன உரிமையாளர் பிரசாந்த் மோடி. அவர், நரேந்திர மோடிக்கு வேண்டியவர். மோடிகளால்தான் இப்போது பிரச்சினையே.
மூவருமே குற்றவாளிகள்
இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய தமிழக இளைஞர் கள் குடித்து அழிகிறார்கள். இளைஞர்களை மதுவின் பிடியிலி ருந்து விடுவிக்க வேண்டும். மதுவைக் கொண்டுவந்து தமிழ கத்தைக் கெடுத்ததில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவருமே குற்றவாளிகள்.
கர்நாடகத்தின் அடாவடி, மீத்தேன், மது ஆகிய பேராபத் துகளை எதிர்த்து முதல் கட்டமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட் டங்களில் 22-ம் தேதி வரை ஊர் ஊராகச் சென்று மக்களை தயார்படுத்தவுள்ளேன். அதன் பின்னர் மக்களைத் திரட்டி இவற்றை முறியடிப்பதற்கான போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் வைகோ.
முன்னதாக, தஞ்சை பெரிய கோயில் எதிரில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்த வைகோ, சிலையின் பாதத்தை மூன்று முறை தொட்டு வணங்கினார். தான் தொடர்ந்து போராட, ராஜராஜனின் பலத்தில் சிறிதள வையாவது தனக்கு வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக வைகோ தெரிவித்தார். தொடர்ந்து, தென்னங்குடி, வல்லம் வழியாகச் சென்று தஞ்சை நகரில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.