Published : 07 Dec 2014 02:45 PM
Last Updated : 07 Dec 2014 02:45 PM

கசக்கும் கரும்பு... மகிமையிழந்த மஞ்சள்...- நெருக்கும் பிரச்சினைகளால் நொறுங்கும் ஈரோடு விவசாயிகள்

காடு வெளஞ்சென்ன மச்சான்...நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்... மாறிவரும் சமூக கட்டமைப்பில் பலரும் விவசாயத்தை விட்டு ஓடிவிட, இன்றும் நம்பிக்கையோடு விளைநிலங்களில் பாடுபடும் விவசாயிகளின் ஆதங்க குரல்தான் இது.

வானம் பார்த்த பூமியை கொண்ட விவசாயிகளில் தொடங்கி, பணப்பயிர் என்று அழைக்கப்படும் நெல், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிடும் விவசாயிகள் வரை சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். பாசனத்துக்கு நீர் பெறுவதில் தொல்லை, விளைபொருட்களுக்கான விலை இல்லை, இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை, விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை, எட்டாத உயரத்துக்கும் சென்ற உரங்கள், இடு பொருட்கள் விலை என விவசாயிகளை நெருக்கும் பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

பருவத்தில் பயிராகவில்லை

நெல் சாகுபடி என்பது பருவத்தோடு தொடர்புடையது. ஆனால், குறிப்பிட்ட பருவத்தில் நீர் கிடைக்காத காரணத்தால் விளைச்சல் குறைவதோடு, உழைப்பிற்கேற்ற பலன் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகிறது. அணை, கால்வாய், கிணறு, ஆழ்குழாய் கிணறு என எந்த வகையிலும் நெல் சாகுபடிக்கு தேவையான முழுமையான நீர் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. பொதுப்பணித்துறையின் நீர் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளையும் இதற்கு காரணமாக கூறுகின்றனர் விவசாயிகள்.

அடுத்ததாய் நெல்லுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையும், தரக்கட்டுப்பாடுகள், விதிமுறைகள் காரணமாக, நெல் கொள்முதல் என்பது முழுக்க, முழுக்க தனியாரின் பிடியில் சிக்கியுள்ளது. நெல் கொள்முதல் மையங்களில் பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1360ம், ஊக்கத்தொகை ரூ.50ம் சேர்த்து ரூ.1410க்கும், சன்னரக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1400ம், ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து ரூ.1470க்கும் நெல் கொள்முதல் செய்யப்படும் என நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நெல்லினை 17 சதவீதம் ஈரப்பதத்துக்கு மிகாமல் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கிடவும், சிட்டா மற்றும் இருப்பிட விலாச நகலையும் மையத்தில் வழங்கி தங்கள் நெல்லை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசு அறித்துள்ளது.

காற்றாடும் கொள்முதல் மையங்கள்

வடகிழக்கு பருவ மழை தனது வேகத்தை காட்டியுள்ள இந்த சூழலிலும், மழைப்பொழிவு இல்லாத காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 17 சதவீத ஈரப்பதம் என்ற விதிமுறையை அரசு தொடர்கிறது. இதனால், அரசின் கொள்முதல் நிலையங்கள் பக்கம் விவசாயிகள் மழைக்கு கூட ஒதுங்கவில்லை. கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலைக்கு அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தள்ளப்பட்டுள்ளன.

ஆனால், தனியார் வியாபாரிகள் விளைநிலத்துக்கே வந்து கொள் முதல் செய்வதோடு, கூடுதல் விலையும் கொடுக்கின்றனர். அத்தியாவசிய பொருளான நெல், அரிசி உற்பத்தி தனியார் வியாபாரிகள் பிடியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசு இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுப்புகின்றனர் விவசாயிகள். இந்த நெருக்கடிகளால், தமிழகத்தில் நெல் நட்டு வந்தவிவசாயிகள் தங்கள் நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கல் நட கொடுக்கும் அவலம் அதிகரித்து வருகிறது.

கரும்பு விவசாயிகளின் கஷ்டம்

கரும்பு விவசாயிகளின் கவலையோ வேறு விதமானது. தாங்கள் விளைவித்த பொருளை யாருக்கு விற்க வேண்டும், என்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற உரிமைகூட அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது. 1966ம் ஆண்டைய மத்திய அரசின் ஆணைப்படி, கரும்பு பயிரிடும் விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு மட்டுமே கரும்பை விற்க முடியும். அதோடு, என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதையும், மத்திய, மாநில அரசுகளே நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன.

நடப்பு ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு டன்னுக்கு ரூ.2100 என ஆதாய விலை நிர்ணயம் செய்தது. இத்துடன் தமிழக அரசு ரூ.550 சேர்த்து டன்னுக்கு ரூ.2650 என நிர்ணயித்தது. ஆனால், அரசு நிர்ணயித்த இந்த விலை குறித்த உத்தரவை எந்த தனியார் ஆலையும் மதிக்கவில்லை.

தமிழகத்தில் 27 தனியார் ஆலைகள், 13 கூட்டுறவு ஆலைகள், இரு பொதுத்துறை ஆலைகள் என மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் அரசு அறிவித்த விலையை கொடுத்து விட்டன. தனியார் ஆலைகளில் ஒரே ஒரு ஆலை மட்டும் நிர்வாக மாற்றம் காரணமாக அரசு விலையை கொடுத்துள்ளது. மீதமுள்ள 26 சர்க்கரை ஆலைகள் தனது உத்தரவை காற்றில் பறக்கவிடுவதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. போராடி களைத்த விவசாயிகள் வேறு வழியின்றி ஆலை நிர்வாகங்கள் சொல்லும் விலைக்கே விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து நடந்து வரும் அவலம்.

குறையும் பாசன பரப்பு

இப்படி அடிமாட்டு விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் ஆலைகள் அதற்கான தொகையை வழங்காமல் ஆறு மாத காலத்துக்கு மேல் இழுத்தடிப்பது அவலத்தின் உச்சம். தமிழக சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.500 கோடியை தொடும் என்கின்றனர் விவசாய அமைப்புகள். சர்க்கரை இறக்குமதி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்க்கரை ஆலைகள் கூறி வருகின்றன.

கரும்பு சாகுபடியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் 8.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயம் கசந்து வருவதால், கரும்பு பயிரிடும் பரப்பு கணிசமாக குறைந்து வருகிறது. உதாரணமாக ஈரோட்டில் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கரும்பு தற்போது 7 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் எத்தனால் உற்பத்தி செய்து, அரசின் அறிவிப்பின்படி பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தினால் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். ஆனால், எத்தனால் குறித்த அறிவிப்புகள் ஏட்டளவிலேயே இருந்து வருகின்றன.

கரும்பு விவசாயிகள் பெற்ற பயிர்கடனை, ஆலைகள் செலுத்தாத காரணத்தால், அடுத்ததாய் பயிர்கடன், நகைக்கடன், கல்விக்கடன் என எந்த கடனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கரும்பு கொள்முதலுக்கான விலையை ஆலையிடம் இருந்து பெற முடியாதது ஒருபுறம், வங்கிகடன் நிலுவையால், புதிய கடன் பெற முடியாதது மறுபுறம் என கரும்பு விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு கூறும்போது, ஒரு பகுதியில் சர்க்கரை ஆலை அமைத்தால், அரவைக்கு தேவையான கரும்பு வேண்டும் என்ற ஆலைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1966ல் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஆலைக்கு கரும்பை கொடுக்க வேண்டும் என்ற விதியை கொண்டுவந்தது. இன்று உலகமயாக்கல் வந்தபின்பும், இந்த விதியை மாற்றாமல் கரும்பு விவசாயியை, ஆலையின் கொத்தடிமையாக தொடர வைத்துள்ளது அரசு. தனக்கு அதிக விலை கொடுப்பவருக்கு கரும்பை விற்க முடியாதது மட்டுமல்ல, தான் விளைவித்த கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றி பயன்படுத்தக் கூட ஆலையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.

குறைந்த செலவில், எளிமையான தொழில்நுட்பத்தில் கரும்பிலிருந்து எத்தனால் எரிபொருளை தயாரிக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, எத்தனால் எரிபொருளை தயாரிக்கவும், அதனை நாங்களே பயன்படுத்திக் கொள்ளவுமாவது எங்களை அனுமதிக்க வேண்டும் என அரசிடம் பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை அனுமதியில்லை. கரும்பு விவசாயிகள் கஷ்டத்தில் இருப்பதையே அரசு விரும்புகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார்.

கோடிகளில் வர்த்தகம்

தமிழகத்தின் மஞ்சள் நகரம் என்ற அடைமொழியைக் கொண்ட ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வர்த்தகமாக மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. மஞ்சள் வணிகத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த ஈரோடு நகருக்கு, கர்நாடக மாநிலம் மைசூர், தமிழகத்தில், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, கரூர், தருமபுரி, வேலூர், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் விளையும் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

இவற்றை விற்பனை செய்வதற்கான சந்தை வாரம்முழுவதும் நடந்து வருகிறது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம், கோபி மற்றும் ஈரோடு வேளாண்மை கூட்டுறவு சங்கம் உட்பட 4 அமைப்புகள் வாயிலாக மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. இது தவிர, நாமகிரிபேட்டை, திருச்செங்கோடு, ஆத்தூர் பகுதிகளில் வாரத்தில் ஒரு நாள் மஞ்சள் சந்தை இயங்கி வருகிறது.

ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடக்கும் மஞ்சள் சந்தை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. தொடர்ச்சியான விலை சரிவால், மஞ்சள் சந்தையில் வரத்து ஒருபுறம் குறைந்தும், இருப்பு அதிகரித்தும் காணப்படுகிறது.

எதிர்பார்ப்பில் விவசாயிகள்

கடந்த 2012ம் ஆண்டு 55 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ) விற்பனைக்கு வந்த நிலையில், 2013ல் அது 10 முதல் 13 லட்சம் மூட்டையாக குறைந்துள்ளது. மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்காத காரணத்தால், இந்த ஆண்டு மஞ்சள் பயிரிட்டுள்ள பாசனப் பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், நடப்பு 2014ம் ஆண்டில், ஆறு முதல் ஏழு லட்சம் மூட்டைதான் விற்பனைக்கு வரும் என்ற நிலை உள்ளது.

அதே போல், 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், 2012ல் இது குவிண்டாலுக்கு ரூ. 3,000 மாக குறைந்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது குவிண்டாலுக்கு, 5,200 முதல் 6000 ரூபாய் வரை விலை போய் கொண்டிருக்கிறது.

மஞ்சள் உற்பத்திக்கு, ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.1.10 லட்சம் செலவாகிறது. இந்த நிலையில், குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். பொதுவாக மஞ்சளை 12 மாதங்கள் வரை இருப்பில் வைத்து விற்பனை செய்யலாம் என்பதால், மஞ்சளுக்கு மதிக்கத்தக்க ஒரு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடங்குகளில் மஞ்சளை வைத்து விட்டு கவலையோடு காத்திருக்கின்றனர் விவசாயிகள். இது போன்று ஈரோடு மாவட்ட கிடங்குகளில் மட்டும், 25 லட்சம் மூட்டைகள் இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.500 கோடி வர்த்தகம் நடக்கும் மஞ்சள் சந்தையில், தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த மஞ்சள் ஏல மையம் அமைய விடாமல் தனியார்

வியாபாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டு கின்றனர் விவசாயிகள். விவசாயிகளின் இயலாமையை புரிந்து கொண்டு அடிமாட்டு விலைக்கு மஞ்சளை வாங்கி பதுக்கி வைத்து சூதாட்டம் ஆடி வருகின்றனர் இடைத்தரகர்கள்.

வேளாண்மைத்துறையில் பிரதான பயிர்களாக கருதப்படும் நெல், கரும்பு, மஞ்சளை பயிரிடும் விவசாயிகள் சந்திக்கும் சோதனைகள் அவர்களை விவசாயத்தை விட்டு விட்டு ஓட வைத்து வருகிறது. நிலத்தில் சாகுபடி செய்து வருமானம் பெற முடியாது என்பதால், நிலத்தையே குடியிருப்பு பகுதிக்காக விற்று விட்டு விவசாயிகள் ஊரை விட்டு காலி செய்யும் அவலம் தொடர அரசு அனுமதிக்கக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x