Published : 10 Dec 2014 09:37 AM
Last Updated : 10 Dec 2014 09:37 AM

கீதையைக் காப்பாற்றுங்கள்!

தொடர்ந்து வாசிக்கப்பட்டும் பல விதமான கோணங்களில் விவாதிக்கப்பட்டும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப் பட்டும்வரும் ஒரு நூலை உயிருள்ள நூல் என்று சொல்லலாம். ஒரு நூல் எந்த மொழியில், எந்த நோக்கத்துக்காக, எந்த தத்துவப் பின்புலத்துடன் எழுதப்பட்டாலும் பல்வேறு தத்துவப் பார்வையைச் சேர்ந்தவர்களின் கவனத்தையும் அது கவர்கிறது என்றால், அவர்கள் அதுபற்றிப் பேசுவது தவிர்க்க இயலாததாகிறது என்றால், அதை உயிருள்ள நூல் என்று சொல்லலாம்.

அந்த நூலை வழிபடுபவர்களும் படித்துப் பரவசமடைபவர்களும் கோபமடைபவர்களும் வியப்படைபவர்களும் அதிலிருந்து பாடம் கற்பவர்களும் அதை அபாயமானது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்றால், அதை உயிருள்ள நூல் என்று சொல்லலாம்.

இத்தகைய ஒரு நூல் எப்போது தன் உயிரை விடும்? அந்த நூலை ஏற்காதவர்களால் ஒருபோதும் அதைக் கொல்ல முடியாது. ஆதரிப்பவர்கள் மட்டுமின்றி மறுப்பவர்களும் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் அதை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நூலை எப்படியாவது முடக்கிப்போட வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? சுஷ்மா ஸ்வராஜைக் கேட்டால், அருமையான யோசனையைச் சொல்லுவார். அந்த நூலைத் தேசிய நூலாக அறிவித்து, அதைப் புனிதப்படுத்தி முடக்கிவிடலாம் என்பார்.

பன்முக வாசிப்புக்கும் பல்வேறு காலங்களில் தொடர்ந்து செய்யப்படும் மறுவாசிப்புகளுக்கும் காலந்தோறும் பல்வேறு விளக்கங்களுக்கும் இலக்காகவும் மையமாகவும் இருந்துவரும் மிகச் சில நூல்களில் ஒன்று பகவத் கீதை. தொடர்ந்து வாசிக்கப்பட்டும் ஆராதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும்வரும் நூல் இது. சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தைக் கொண்டது என்று கருதுபவர்களும் புறக்கணிக்க இயலாத அளவுக்குக் கவித்துவமும் தத்துவச் செறிவும் கொண்ட நூல் கீதை. ஆணித்தரமான மொழியில் இதன் பல பகுதிகள் இருந்தாலும் அடிப்படையிலேயே விவாதத்தைத் தூண்டும் நூல் இது.

இந்த நூலை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் வேர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். வியப்பூட்டும் இந்த முரணான நிலைப்பாடுகளைத் தூண்டும் இத்தகைய நூல், தொடர்ந்து விவாதிக்கப்படுவதன் வழியே தனக்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அற்ப அரசியல் கணக்குகளுக்காக இதைத் தேசியப் புனித நூலாக அறிவிக்கும் சிந்தனை, தன்னளவில் அபாயகரமானது மட்டுமல்ல, கீதையின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளாததும்கூட.

இந்தியா முழுமைக்கும் பொதுவான நூல் என்று எதுவுமே இருக்க முடியாது என்பதை ஒற்றைப் பரிமாணச் சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது. கீதையைத் தனக்கான நூல் அல்ல எனக் கருதும் மதத்தவர்களும் நாத்திகர்களும் இதே இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள்தான். இதே கருத்தைக் கொண்ட ஆத்திக இந்துக்களும் இதே இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் ஏதோ ஒரு விதத்தில் உரையாடும் தன்மையைக் கொண்டிருப்பதுதான் கீதையின் சிறப்பு. இதை ‘தேசிய நூல்’ என்ற பெயரில் திணிக்க முயல்வது இதன் சிறப்பைப் புரிந்துகொள்ள இயலாத அறிவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடியும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும் இந்திய அரசியல் சாசனத்தின் வலிமையும் இது போன்றவர்களிடமிருந்து இந்த நூலைக் காப்பாற்றும் என்று நம்புவோமாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x