

தமிழகம் முழுவதும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 29 மூத்த டாக்டர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும், சென்னை மாவட்ட தலைவருமான பி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் பணிபுரியும் 29 மூத்த டாக்டர்கள், கடந்த 9-ம் தேதி இரவு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை இஎஸ்ஐ மருத்துவமனைகளில் பணிபுரியும் 8 பெண் டாக்டர்கள் உட்பட 12 டாக்டர்களும் அடங்குவர். குழந்தை இறப்பு மற்றும் மகப்பேறு காலத்தில் தாய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த டாக்டர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
டாக்டர்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்துள்ளோம். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கலந்தாலோசித்து போராட்டம் பற்றி அறிவிக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டியின்போது சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்சேரலாதன், பொருளாளர் ஏ.ராமலிங்கம், இணை செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.