செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
குன்றத்தூரை அடுத்த திருமுடி வாக்கத்தில் 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமுடிவாக்கம் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (30). சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கு, அந்தோணி மேரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் செல்வத்துக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அந்தோணி மேரிக்கு தெரிந்ததால், கணவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. செல்வத்தின் தாயாரும் இதைக் கண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது தாயாரை மிரட்ட, நேற்று காலை வீட்டின் அருகில் இருந்த 120 அடி செல்போன் டவரின் உச்சிக்கு செல்வம் ஏறிச்சென்றார். தனக்குப் பிடித்த பெண்ணுடன் வாழவிடாவிட்டால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குன்றத்தூர் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரைக் கீழே கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார், செல்வத்தை எச்சரித்து அனுப்பினர்.
