Published : 02 Dec 2014 09:51 AM
Last Updated : 02 Dec 2014 09:51 AM

பெரியாறு அணைக்குச் செல்ல தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு: கேரளத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்

பெரியாறு அணையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளச் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேரள வனத் துறையினர் தடுத்து திருப்பியனுப்பினர். இதேநிலை தொடர்ந்தால் கேரளத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். தேக்கடி படகுத் துறையை அடைந்த பொதுப்பணித் துறை உதவிக் கோட்ட செயற்பொறியாளர் சவுந்திரம், உதவிச் செயற்பொறியாளர்கள் அக்பர் அலி, ரமேஷ்வரன், ராமமூர்த்தி ஆகியோரை கேரள வனத் துறையினர் அங்கு தடுத்து நிறுத்தினர்.

எதற்காக அணைக்குச் செல்கிறீர்கள், யார், யார் செல்கிறீர்கள் என்பன போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அடையாள அட்டைகளையும் வாங்கி சோதனையிட்டனர். அவர்களது கேள்விகளுக்கு பெரியாறு அணை மூவர் குழுவால் நியமிக்கப்பட்ட துணைக் குழுவின் பிரதிநிதி சவுந்திரம் பதிலளித்துள்ளார்.

ஆனாலும், அனைவரும் தனித் தனியாக விளக்கக் கடிதம் அளிக்க வேண்டும் என்றும், படகில் செல்வதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் அனுமதிக்க முடியாது என்றும் கூறி கேரள வனத் துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கொட்டும் மழையில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருப்பதை கேரள வனத் துறையினர் பொருட்படுத்தவே இல்லை. இதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கேரள வனத் துறையின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால், மாலை வரை அங்கேயே காத்திருந்துவிட்டு பெரியாறு அணைக்குச் செல்ல முடியாமலேயே தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் திரும்ப வேண்டியதாகிவிட்டது.

4 நாட்களுக்கு முன்னரும் இதேபோல கேரள வனத் துறையினர் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளைத் தடுத்தபோது, தமிழக உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முல்லை பெரியாறு அணை மீட்புக் குழுத் தலைவர் ரஞ்சித் கூறும்போது, ‘தினமும் 5,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்போது, தமிழக அதிகாரிகள் செல்வதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது. இதேநிலை நீடித்தால் கேரளத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

18-ம் கால்வாய் திட்ட விவசாயிகள் சங்கச் செயலர் திருப்பதிவாசகன் கூறும்போது, ‘பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரை தேக்கும் நடவடிக்கையை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை கேரள அரசு கையாள்கிறது. கேரளத்தின் அத்துமீறல் தொடர்ந்தால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர்’ என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பெரியாறு புலிகள் காப்பக சரணாலயத்தின் துணை இயக்குநர் சஞ்சய்குமார், தேக்கடி வனச் சரகர் சஞ்சீவன் ஆகியோரது தூண்டுதல் பேரில்தான் வனத் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். பலமுறை எடுத்துக் கூறியும் கேரள வனத் துறையினர் எங்களை அனுமதிக்காமல் பிடிவாதமாக மறுத்துவிட்டனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x