பாலியல் புகாரை முறையாக விசாரிக்காததால் 2 மாணவிகளுக்கு புதுவை பல்கலை. ரூ.40 ஆயிரம் இழப்பீடு தரவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகாரை முறையாக விசாரிக்காததால் 2 மாணவிகளுக்கு புதுவை பல்கலை. ரூ.40 ஆயிரம் இழப்பீடு தரவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பாலியல் துன்புறுத்தல் புகாரை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு புதுவை பல்கலைக்கழகம் (தலா ரூ.20 ஆயிரம் வீதம்) ரூ.40 ஆயிரத்தை வழக்கு செலவுத் தொகையாக (இழப்பீடு) வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகளை சீனியர் மாணவர் ஒருவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இச்சம்பவத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளையே தண்டித்து இடைநீக்கம் செய்தது. இதனை எதிர்த்து அந்த மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, பாதிக்கப்பட்ட மாணவிகள் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் முறையிட்டனர். இருப்பினும் அந்த மாணவிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுத்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்து புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேற்கண்ட சம்பவத்தால் இரு மாணவிகளும் இரண்டாம் பருவத்தில் (செமஸ்டர்) முழுமையாக வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. எனவே, பல்கலைக் கழகம் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மனுதாரர்கள் இருவரும் விடுதியில் தங்குவதற்கும், கருத்தரங்குகள், பயிலரங்குகள், விளையாட்டு போன்றவற்றில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கக்கூடாது.

புதுவை பல்கலைக் கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குழு, மனுதாரர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி கொடுத்த புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். இப்பிரச்சினையை முறையாகக் கையாளாமல் மாணவிகளுக்கு இழப்பு ஏற்படுத்திய புதுவை பல்கலைக்கழகம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் இரண்டு மாணவிகளுக்கும் ரூ.40 ஆயிரத்தை வழக்கு செலவுத் தொகையாக (இழப்பீடு) வழங்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in