Published : 16 Dec 2014 10:09 AM
Last Updated : 16 Dec 2014 10:09 AM

தபால் நிலையத்தில் ரூ.3,500 ஸ்டாம்புகள் திருட்டு: ரூ.27 லட்சம் தப்பியது

தண்டையார்பேட்டை தபால் நிலையத்தில் பின்பக்க கதவை உடைத்து ரூ.3,500 மதிப்புள்ள ஸ்டாம்புகள் திருடப்பட்டன. பெட்டகத்தில் இருந்த தொகை ரூ.27 லட்சம் பாதுகாப்பாக உள்ளது.

தண்டையார்பேட்டை துறைமுகம் குடியிருப்பு காலனியில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. போஸ்ட் மாஸ்டராக இளங்கோ பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) தபால் நிலையம் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இங்குள்ள காவலாளி செல்வம் (40) என்பவர் இரவு பணி முடிந்து, நேற்று முன்தினம் மாலை மீண்டும் பணிக்கு வந்தபோது, தபால் நிலைய பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த காவலாளி, போஸ்ட் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோ பார்த்தபோது, தபால் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. ரூ.3,500 மதிப்புடைய ஸ்டாம்புகளை காணவில்லை. ஆனால் முதியோர், விதவை, ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் அரசின் உதவித்தொகை ரூ.27 லட்சம், 2 டிரெங்கு பெட்டிகளில் பாதுகாப்பாக இருந்தது.

இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x