

தமிழகத்தில் நாற்பதாண்டு களுக்கு முன் பிறந்த யாருக்கேனும் அரவிந்தன் அல்லது பூரணி என்று பெயர் இருந்தால் அவரது பெற்றோர் அந்தப் பெயரை ஏன் வைத்தார்கள் எனக் கேட்டுப்பாருங்கள். அனேகமாக அவருடைய அப்பாவோ அம்மாவோ ‘குறிஞ்சி மலர்’ என்னும் நாவலைப் படித்திருப்பார்கள். அந்த நாவலில் நாயகன் பெயர் அரவிந்தன். நாயகி பூரணி. நாவலைப் படித்துக் கிறங்கிப்போன அந்தக்கால வாசகர்கள் அந்தப் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டுமளவு நாவலுடன் ஒன்றிப்போனார்கள்.
அதுதான் நா.பா. என்கிற ‘தீபம்’ நா. பார்த்தசாரதியின் எழுத்தாளுமை. தமிழ் இலக்கிய உலகில், சமரசத்துக்கு இடம் கொடுக்காத தீவிர எழுத்தாளர்கள், ஜனரஞ்சக எழுத்தாளர்கள் என்று 2 பிரிவினர் உண்டு. இந்த இரு பிரிவுக்கு இடையே இயங்கிய எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் நா. பார்த்தசாரதி. ‘குறிஞ்சி மலர்’, ‘பொன் விலங்கு’ போன்ற புகழ்பெற்ற படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். சமூக நோக்கையும் லட்சியவாதத்தையும் தன் புனைவுகளின் வழியே முன்வைத்தவர்.
1932 டிசம்பர் 18-ல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எனும் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் நா. பார்த்தசாரதி. முறையாகத் தமிழ் கற்ற இவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த நா. பார்த்தசாரதி, பின்னர் பத்திரிகை உலகில் நுழைந்தார். கல்கி இதழின் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகை வாழ்வைத் தொடங்கினார்.
தீபம் இதழின் பன்மைத் தன்மை
தீரன், அரவிந்தன், மணிவண் ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவந்தார். கல்கி இதழில் இருந்து வெளியில் வந்தபின், ‘தீபம்’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். 1970-கள் மற்றும் 80-களில் இலக்கிய உலகின் பதிவுகளில் ‘தீபம்’ இதழ் மிக முக்கியமானது.
பரவலான வாசகர்களைச் சென்றடைந்த எழுத்தாளராக இருந் தாலும் தனது எழுத்துகளில் சமரசம் செய்து கொள்ளாதவர் நா.பா. இலக்கியத்தை வெறும் பொழுது போக்காக மட்டும் நினைக்காத இவர், சமூக மாற்றத்துக்கு எழுத்தை ஆயுதமாக்குவது என்னும் தனது பற்றுறுதியில் சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. தீவிர இலக்கிய உலகைச் சேர்ந்த பல எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்புப் பாராட்டிவந்த நா.பா., அவர்களது படைப்புகளையும் விமர்சனங்களையும் இதர கட்டுரைகளையும் ‘தீபம்’ இதழில் வெளியிட்டார். காத்திரமான இலக்கிய விவாதங்களும் அந்த இதழில் வெளியாகின. சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’ நாவல் குறித்து கரிச்சான் குஞ்சு எழுதிய விமர்சனக் கட்டுரை அவற்றுள் ஒன்று. சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களிடம் அவர் நெருங்கிய நட்புடன் இருந்தார்.
சமுதாயப் பிரச்சினைகளை அலசும் எழுத்து அவருடையது. அவரது கதைகளில் வரும் பாத்திரங்கள் லட்சிய வாதம் கொண்டவர்களாக இருப் பார்கள். பரவலான வாசகர்களைச் சென்றடைந்த அவரது சமகால ஜன ரஞ்சக எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிடும்போது, அவரது படைப்புகளில் இலக்கியத் தன்மை அதிகம் இருப்பதைக் காண முடியும். துருத்திக்கொண்டிருக்கும் செயற்கைத் தன்மையை அவரது படைப்புகளில் பார்க்க முடியாது. ஆபாசம், வன்முறை போன்ற கூறுகளும் அவர் எழுத்தில் இருக்காது. தனது இலக்கியக் கோட்பாடுகளில் அவர் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை.
‘குறிஞ்சி மல’ரின் தாக்கம்
நா.பா. எழுதிய ‘குறிஞ்சி மலர்’ வாசகர்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு குறிப்பிடத் தக்கது. வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நாவல் பாத்திரங்களின் பெயர்களை வைக்கும் அளவுக்கு அந்த நாவல் வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. சமூக மாற்றங்களை விரும்பும் இளைஞன், சமுதாயத்தை வெறுக்காமல் அதற்குள்ளிருந்தே மாற்றத்தைத் தேடும் இளைஞனின் கதை அது. இந்த நாவலின் காட்சி வடிவமான தொலைக்காட்சித் தொடர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். லட்சியவாத இளைஞர் பாத்திரத்தில் தோன்றிய ஸ்டாலின், ஒரு நல்ல நடிகராக அடையாளம் காணப்படக் குறிஞ்சி மலர் காரணமாக அமைந்தது. நா. பார்த்தசாரதியின் எழுத்துக்கு ஏராளமான வாசகர்கள், குறிப்பாக வாசகிகள் இருந்தனர். அவர் மீது இன்றைய நவீன எழுத்தாளர்களிடமும் நல்ல மதிப்பு உண்டு.
சாகித்ய அகாடமி
‘சாயங்கால மேகங்கள்’, ‘நிசப்த சங்கீதம்’, ‘ராணி மங்கம்மாள்’, ‘ஆத்மாவின் ராகங்கள்’, ‘சத்திய வெள்ளம்’ உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியிருக்கிறார். 1971-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, அவர் எழுதிய ‘சமுதாய வீதி’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. நாடகக் குழுவில் நடிக்க வாய்ப்புத் தேடி சென்னை வரும் இளைஞனின் வாழ்க்கையை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. தமிழ்நாடு அரசு பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு போன்ற விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.
ரஷ்யா, பிரிட்டன், போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களின் அடிப்படையில் பயண நூல்களையும் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி கமிட்டி உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் போன்ற பதவிகளை அவர் வகித்தார்.
அரசியல் தொடர்புகள்
அரசியலிலும் நா. பார்த்தசாரதி ஆர்வம் செலுத்தினார். காமராஜர் மீது பேரபிமானம் கொண்டவர் அவர். சுதந்திரா, இந்திரா காங்கிரஸ், ஜனதா போன்ற கட்சித் தலைவர்களுடன் நட்பில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய கூட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று தனது நாற்பத்தைந்தாவது வயதில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் நா. பார்த்தசாரதி. ‘பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டார். முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு, மாரடைப்பால் கால மானார்.