Last Updated : 10 Dec, 2014 10:41 AM

 

Published : 10 Dec 2014 10:41 AM
Last Updated : 10 Dec 2014 10:41 AM

பெலகாவியில் கர்நாடக பேரவைத் தொடர் தொடக்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர் கால கூட்டத்தொடர் பெலகாவியில் நேற்று தொடங்கிய‌து.

அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் கர்நாடக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவியை மகாராஷ் டிராவுடன் இணைக்கக் கோரியும் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் அங்கு கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய‌து.

வருகிற 20-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6600 போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் கர்நாடகத்தில் அதிகரித்திருக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள், ஊழல் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதே போல முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கரும்புக்கு கூடுதல் விலை, விவசாயிகளின் பிரச்சினை, வடகர்நாடக மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி குரல் எழுப்பினர். இதற்கு கர் நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்தார். இருப்பினும் கூச்சல், குழப்பம் தொடர்ந்ததால் சபாநாயகர் காகோடு திம்மப்பா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

விவசாயிகளின் போராட்டம்

இதனிடையே கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் பசவராஜப்பா, பசுமைப்படை அமைப்பின் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2500 வழங்கக் கோரியும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் நெல், கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவற்றுக்கும் அரசே ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சுவர்ண விதான சவுதாவை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் போலீஸார் தடுத்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x