மண்ணெண்ணெய் மானியம் குறைப்பு: தா.பாண்டியன் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ் மாநில மாநாடு கோவையில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநாட்டு இலட்சினையை தா.பாண்டியன் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் ஏழ்மை, வறுமை தொடர்கிற வரையில் மானியம் தொடர வேண்டும். தற்போது மத்தியில் பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு பல்வேறு துறைகளில் மானியத்தை குறைத்து வருகிறது.
சாதாரண மக்களுக்கு வழங்கும் உதவியை மானியம் என்றும், பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ஊக்கத் தொகை என்றும் அரசு குறிப்பிடுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியங்களை மத்திய அரசு குறைத்துள்ளது.
மாநில அரசுகள் வழங்கும் நலத் திட்ட உதவிகளையும், மானியங்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்துகிறது. இந்நிலை நீடித்தால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
