ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மே 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத விவகாரம்

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மே 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத விவகாரம்
Updated on
1 min read

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை மே 19-ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 1991-92 மற்றும் 1992-93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையை சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், 4 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பொரு ளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். தட்சிணாமூர்த்தி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். ஏப்ரல் 28-ம் தேதி விசாரணையின்போது முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘இந்த வழக்கின் விசாரணயை முடிப்பதற் கான கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர் தல் நடவடிக்கைகள் இன்னும் முடிய வில்லை. வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதிதான் நடக்கிறது. ஆகவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’’ என வாதிட்ட னர். இதையடுத்து வழக்கின் விசாரணையை மே 19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஆஜராக வேண்டிய தேதி பற்றி அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in