Last Updated : 23 Dec, 2014 09:14 AM

 

Published : 23 Dec 2014 09:14 AM
Last Updated : 23 Dec 2014 09:14 AM

பொங்கல் பரிசுக்காக நிறுத்திவைப்பா?- நியாயவிலைக் கடைகளில் பச்சரிசி தட்டுப்பாடு: பொதுமக்கள் புகார்

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பச்சரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்காக பச்சரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 1.68 கோடி பச்சை அட்டைதாரர்கள் உட்பட 1.86 கோடி குடும்ப அட்டைதாரர்கள் அரிசி வாங்கத் தகுதியானவர்கள். பச்சை அட்டைக்கு, குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா 4 கிலோ, சிறுவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா 2 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மொத்தத்தில், ஒரு குடும்பத்துக்கு ஒரு அரிசி ரகம், 20 கிலோவுக்கு மிகாமல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் இந்த மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே பச்சரிசி வழங்கப்பட்டதாகவும், அதன்பிறகு கிடைக்கவில்லை என்றும் நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி பெரம்பூர், புரசை பகுதி குடும்ப அட்டைதாரர்கள் கூறியதாவது:

நியாயவிலைக் கடைகளில் மாதக் கடைசியில் பருப்பு வகைகள் கிடைக்காது. ஆனால், அப்போதுகூட புழுங்கல்அரிசி, பச்சரிசி கிடைக்கும். எப்போதும் இல்லாத வகையில் இந்த மாதம் பச்சரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இட்லி, தோசை, இடியாப்பம், பொங்கல் செய்ய பச்சரிசி தேவைப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.40-க்கு வாங்கவேண்டியுள்ளது. எனவே, பச்சரிசித் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உள்ள சில நியாயவிலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததாவது:

பச்சரிசிக்கு இந்த மாதம் தட்டுப்பாடு நிலவுவது உண்மையே. வழக்கமாக 4 லோடு வரும் கடைகளுக்கு இந்த மாதம் 2 லோடுதான் வந்தது. முதலில் வந்தவர்களுக்கு கொடுத்ததும் தீர்ந்துவிட்டது. பச்சரிசி கேட்பவர் களிடம் பதில் சொல்ல முடிய வில்லை. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் பொங்கல் வருவதால் அனைவரும் பச்சரிசி வாங்குவர். அப்போது தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்காக இப்போது லோடு அனுப்புவதை குறைத்திருக்கலாம்.

இவ்வாறு சில ஊழியர்கள் கூறினர்.

இதுதொடர்பாக கேட்டதற்கு உணவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:

தமிழக நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்துக்கு 3.24 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதில் 3.18 டன் அரிசியை நுகர்வோர் வாங்குகின்றனர். நியாயவிலைக் கடைக்குத் தேவையான அரிசியில் பெரும் பங்கை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து வாங்குகிறோம்.

பச்சரிசி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கவில்லை. அதனால் நியாயவிலைக் கடைகளுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்படவில்லை. ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஸ்டாக்கை இன்னும் விற்காமல் வைத்திருப்பவர்களிடம், ‘பழைய ஸ்டாக்கை முதலில் விற்றுவிடுங் கள்’ என்று கூறி, அதுபோக எஞ்சிய அளவு அரிசி மட்டும் அனுப் பப்பட்டது. மற்றபடி, ஸ்டாக் அனுப்பு வது எதுவும் குறைக்கப்படவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x