

மதுரை ஆட்சியரின் நோட்டீஸுக்கு எதிராக பிஆர்பி உள்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கிரானைட் முறைகேடு தொடர் பாக அபராதம் விதிப்பது தொடர் பாக பிஆர்பி உட்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்களுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை ரத்து செய்ய கோரி கிரானைட் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து கிரானைட் நிறுவனங்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் நேற்று விசாரித்தனர். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. சட்ட ஆணையராக சகாயத்தை தலைமை நீதிபதி அமர்வு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் கிரானைட் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுக்களை இங்கு விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்படுகின்றன. அங்கு இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, ஆட்சியரின் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.