Published : 04 Dec 2014 09:46 AM
Last Updated : 04 Dec 2014 09:46 AM

புதுக்கோட்டை அருகே வங்கியில் திருடப்பட்ட 35 கிலோ நகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: 19 கிலோ நகைகள் மாயம்?

புதுக்கோட்டை அருகே வங்கியில் இருந்து திருடிச் சென்றபோது மீட்கப்பட்ட 35 கிலோ தங்க நகைகள் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், 19 கிலோ நகைகள் மாயமாகிவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் நவ.30-ம் தேதி புகுந்த மர்ம நபர், லாக்கரில் இருந்த நகைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார். வழியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரைக் கண்டதும், மூட்டையை வீசிவிட்டு அவர் தப்பிவிட்டார். இது தொடர்பாக 5 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 35 கிலோ தங்க நகைகளை 3 பெட்டிகளில் வைத்து, கீரனூர் டி.எஸ்.பி. பி.ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் கீரனூர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

இவற்றை, நீதிபதி கே.சக்திவேல் முன்னிலையில், நீதிமன்ற அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், போலீஸார், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சரிபார்த்தனர். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், வங்கிக் கணக்குகளை சரிபார்த்தபோது, 5328 பேரின் அடகு நகைகள் லாக்கர்களில் இருந்ததும், அவற்றில், 54 கிலோ தங்க நகைகள் குறைந்துள்ளதும், 35 கிலோ தங்க நகைகள் திருடுபோய், மீட்கப்பட்ட நிலையில், 19 கிலோ நகைகள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்தத் தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா கூறும்போது, “கூடுதல் நகைகள் மாயம் குறித்து வங்கியிலிருந்து புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

மீட்கப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே, உண்மை நிலை தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x